பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆமாம், சதா போர்க்களம் போலத்தான் உடல் நலிய, மெலிய, மெல்ல அழியும் மேனி என்பதை நாம் புரிந்து கொள்வோம். பரிகாரமான வாழ்க்கையைப் பின்பற்றுவோம்.


124. ஞானம்

சாகும் மனிதனுக்கும் சாகாத எமனுக்கும் இடையில், நோகாது வாழவும், சோகம் நீங்கிய சுகவாழ்வு வாழவும் உதவுவதுதான் ஞானம்.

தேரான மனதை, நேராகவே செலுத்தி நிலை சேர்க்க உதவுவதுதான் ஞானம்.

தனக்குள்ளே தன்னைப் பார்த்து, தானாய் நின்று, வானாய் உயரும் வழி வகைகளைக் காட்டுவதே ஞானம் ஆகும்.

கயிறு திரிக்க பல நூல் வேண்டும். ஆனால் மனதைக் கட்ட ஒரு நூலாக, அரு நூலாக, திருநூலாக, பெருநூலாக இருந்து உதவுவதுதான்ஞானம்.

குப்பை போன்ற பயனற்ற பொருட்களைக் கொண்டிருக்கிறது உடல். அதனால்தான், அந்த உடலை குப்பைமேனி என்று கூறுவார்கள் சிலர். அந்த குப்பை சேரக்கூடிய காரணத்தை பூரணமாய் கற்பித்து, போக்கும் வழிகளைக் கூறி புண்ணியம் தேடித் தருவதுதான் ஞானமாகும்.

தன்னை அறியாதவன், தன்னைப் புரியாதவனுக்கு இறைவன் தன்னைக் காணவே முடியாது என்று அறிவுறுத்துவதும் ஞானம்தான்.