பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

135


ஒரு தாய்க்கு ஒரே மகன். வெளியூருக்கு வேலை பார்க்கப் போகிறேன் என்று தாயிடம் விடை கேட்கிறான். தாய்க்கோ மனமில்லை. மகனுக்கோ போயாக வேண்டும் என்ற பிடிவாதம், முடியாது என்று கூறி மகனை நோகடிக்க விரும்பாத தாய், ஒரு வேண்டுகோளை விடுக்கிறாள். மகனும் சம்மதிக்கிறான்.

பயணம் போகிறபோது, இரவு நேரத்தில் புளிய மரத்தடியில் தூங்கி எழவும், ஊருக்குத் திரும்பி வருகிறபோது வேப்பமரத்தின் கீழ் தூங்கி வரவும் என்ற தாயின் நிபந்தனையை மகன் ஏற்கிறான்.

ஆறு ஏழு நாட்கள் நடந்த நடைப் பயணத்தில், புளிய மரத்தின் அடியில் தூங்கியதால் ஏற்பட்ட வெப்பத்தால், அவனது உடல் நலம் குன்றிப் போனது. வேலை தேட முடியாமல் வீட்டுக்குத் திரும்பினான்.

வரும்போது, இரவில் வேப்பமரத்தடியில் தூங்கினான். வீட்டுக்கு வரும்போது அவனுக்கு முழு நலம் திரும்ப வந்து விட்டது. இயற்கையை அனுசரித்து வாழ்கிறபோதுதான் இன்பம் கிடைக்கிறது. கேளாமலேயே தொடர்கிறது. இந்தக் கதை கூறும் பாடம் திரவியம் தேடு என்ற கருத்துக்கு பொருத்தமானதாக இருக்கிறதல்லவா!

திரவியத்தைத் தேடி, தேகத்தைக் காத்து வலிமை பெற்றுக் கொண்டால், திரவியம் தானாக வந்து குவிந்து விடாதா என்ன?