பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கொடுத்து மகிழ்பவனுடைய குதூகலமான பேச்சு இது. ஆக வார்த்தை ஒன்றுதான். அது போய் விழுகின்ற மனிதர்கள் மத்தியில் போய்விழும் போது அது மாறுபட்டு வேறுபட்டு கூறுபட்டு குழைந்து போகிறது என்பதற்கு உதாரணம் சொரிய சொரிய இன்பம்.


132. உப்பிட்டவரை உள்ளளவும் நினை

தமிழர்களுக்கு சோறு பற்றி பேசுவதென்றால் கொள்ளை இன்பம். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்கள. யாராவது ஒருவர் சோறு போட்டால் உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே என்று பரணியே பாடிவிடுவார்கள்.

உணவு தந்தார் என்று சொல்வதற்குப் பதிலாக மிகவும் நாசூக்காக மிகவும் நுணுக்கமான முறையிலே உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று சொல்வார்கள்.

உப்பென்றால் உணவு என்று தப்பாக பொருள் கொண்டு தவறாக இந்த வார்த்தையை பயன்படுத்து கிறார்கள். உப்பு என்றால் உணவு என்று அர்த்தமே இல்லை. உப்பு என்றால் இனிமை என்று பொருள்.

ஆக உப்பு இட்டவர் என்றால் மனதிற்கு இனிமை சேர்த்தவர் என்று அர்த்தம். ஒருவர் மனதிற்கு சொல்லாலோ, செயலாலோ மற்றும் பொருள் உதவியாலோ மகிழ்ச்சி உண்டு பண்ணிய ஒருவரை உள் அளவும் அதாவது உன்னுடைய ஆழ்மனது வரையிலும் நினைத்துக் கொண்டிரு என்பதற்காகத்தான் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றார்கள்.