பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

147


139. ஒழுக்கம்

உடலைக் காக்க ஒரு நாளைக்கு
உண்ணாமல் முயற்சிப்பது விரதம்
ஒரு மாதத்திற்கு முயற்சிப்பது நோன்பு
வாழும் காலம் வரை முயற்சிப்பது ஒழுக்கம்
வாழ்வில் ஒழுக்கம் காப்பவன்
எல்லோருடைய நெஞ்சிலும் வாழ்கிறான்.
ஒழுக்கம் இல்லாதவன் இருக்கும் பொழுதே
நோகிறான் - வேகிறான் - சாகிறான்.
வாழ்வதா - தாழ்வதா? எல்லாம்
அவனவன் கையில் தான் இருக்கிறது
(கை = ஒழுக்கம்)


140. ஆயன்

தனக்காக தன்னை இழப்பவன் தீயன்
தனக்காகப் பிறரை அழிப்பவன் பேயன்
தனக்காகவும் பிறருக்காகவும் தன்னை தருபவன்ஆயன்!
இப்பொழுதெல்லாம் ஆயர்களைப் பார்க்க முடிவதில்லை
பேயர்கள் தான் பெரிதாகக் காட்சியளிக்கின்றனர்.


141. உடை

உடுக்கும் துணிகளில் உயர்வானதாகப் பார்த்து
அணிவதை உடை என்றனர் (உடு +ஐ)
உடுக்கும் துணி கௌரவத்தைக் காக்கவும்.
ஒழுக்கத்தை உயர்த்தவும், மானத்தை மீட்கவும்
உதவுவதை உடுக்கை என்றனர் (உடு + கை)