பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

33


தமிழர் பெருமை எல்லையற்றது. தரணிக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்வது. அன்புக்கும் பண்புக்கும் ஒரு நிதர்சன நிலையைக் கண்டது. அதைத்தான் தீர்த்தம் என்கிறோம்.

அந்தத் தீர்த்தத்தை ஏந்திக் கொண்டிருக்கிற இன்றைய தமிழர்கள் விளிம்பில்லாத பாத்திரங்களாகவே வாழ்கின்றார்கள்.

கரையற்ற பாத்திரத்தில் தங்காதல்லவா நீர்? ததும்பிப் போய்விடும்! அதுபோலத் தான் தமிழர்களின் பண்பாடுகளும் ததும்பிப் போய்க் கொண்டிருக்கின்றன. தமியராக உள்ள தமிழருக்கு ஒரு தனிக் குணம் எப்படி வளர்ந்திருக்கிறது தெரியுமா?

தான் ஆயிரம் பெண்களிடம் சென்றாலும் தனக்கு எயிட்ஸ் வரக்கூடாது. மற்றவன் பெண்கள் பக்கமே போகக் கூடாது. ஆனாலும் அவனுக்கு எயிட்ஸ் வந்துவிட வேண்டும். தனிக் குணத்திற்கு இது சிறு சான்றுதான்.


37. பொடியாட்களும் தடியாட்களும்

காலத்தின் ஜாலம் அலங்கோலம். புழுதியில் கிட்ந்தவர்களுக்குப் பொருள் குவிந்து விடுகிறது.

பொருள் வந்த பிறகு பழைய பாவங்கள் மறைந்து போகிறது.

புகழும் பதவியும் வந்து சேர்ந்ததும், பொடியாட்களை தலைவர்களாக்கி விடுகிறது. பிறகு அவர்கள் சாம்ராஜ்யம் களைகட்டிக் கொள்கிறது.