பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

43


49. விதியா? அப்படி என்றால்?

விதி என்றால் உண்டாக்குதல், உருவாக்குதல், செய்தொழில், தன்மை என்றெல்லாம் அர்த்தம் உண்டு.

மதி என்றால் விருப்பம், அறிவு, நிதானம் என்றெல்லாம் பொருள் உண்டு.

மதி வழியே விதி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது அவரவர் அறிவு வழியேதான். ஆசையின்படிதான். விருப்பத்திற்குரிய விவேகப்படி தான் விளைவுகள் உண்டாகின்றன. முடிவுகள் ஏற்படுகின்றன. மோச நாசங்கள் ஏற்படுகின்றன.

நடு சாலையிலே ஒருவன் நடப்பது அவனது அறிவும் விருப்பமும் உண்டாக்குகின்ற வேலை. வாகனங்களால் உயிருக்கு ஆபத்து நேர்வதும், மரணம் விளைவதும், அவனது விருப்பத்தின் விளைவு.

விளைவை விட்டு விட்டு, விதி வந்து போனான் என்று, விசாரத்துடன் பேசிவிட்டுப் போய் விடுகின்றார்கள்.

நல்லது நினைக்கின்ற மதியால் நல்ல விதி தொடரும். அநியாயமான மதியால் அகால நிகழ்ச்சிகளான விதிகள் தொடரும். அதனால்தான் விதியான விளைவுகளை, மதியான அறிவால் கட்டுப்படுத்த முடியும், வெல்ல முடியும் என்கிறார்கள்.

மதியை யாரும் மதிப்பதில்லை. விதியை யாரும் துதிப்பதும் இல்லை. ஏனென்றால் அதுதான் விதியின் விதி.