பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


55. உறுதியும் வலிமையும்

விருப்பம் என்று வந்து விட்டால் நெருப்பும் சூடு தணிந்து போகும்! வலியும் கிலி கொண்டு விலகும். துருப்புகளாக திருப்பங்கள் நிகழும்! கர்ப்பத்தைக் கலைக்கும் கஷ்டங்களும், கற்கண்டு சுவையாக மாறிக் கொள்ளும் சர்ப்பங்களாக சந்தர்ப்பங்கள் படம் எடுக்கும்! சங்கடங்கள் எல்லாம் தடம் மாறி விடும். இப்படியெல்லாம் எப்போது நடக்கும்? விருப்பம் மட்டும் போதாது. விருப்பத்தில் உறுதியும் விடாப்பிடியான வைராக்கியமும் வலிமையும் இருந்தால் தான்.


56. விதியை மதி எப்போது வெல்லும்

மதியால் விதியை வெல்லலாம் என்பவர் சிலர். மதியை விதி மாய்த்து விடும் என்பது பலரின் நம்பிக்கை. விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு விளக்கம் தருபவர்கள் அறிவால், ஆட்டிப் படைக்கும் விதியை வென்று விடலாம் என்பார்கள். எப்படி என்றால் அப்படித்தான் என்று நிறுத்திக் கொள்வார்கள்.

மதியால் விதியை ஏன் மாற்ற முடியாது? அப்படி என்றால் விதி என்பது என்ன என்று கேட்டால் என்னைக் கேட்காதீர்கள் என்று ஒதுங்கிப் போவோர் எண்ணிக்கையில் ஏராளம்.

நாம் இங்கே மதி என்றால் என்ன? விதி என்றால் என்ன? என்று விளக்கிப் பார்ப்போம். விவரம் புரியும். மதி என்றால் அறிவு, விருப்பம், நிதானம் என்றும், விதி என்றால் தன்மை, செய்தொழில் உண்டாகுதல், விளைதல், ஊழ் என்றும் பல பொருட்கள் உண்டு.