பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


63. தவறு நம்முடையதுதான்

இருக்கும் பணத்தை என்ன செய்வது? என்று வசதியாக வாழ்பவர்கள் யாரும் அரசியலுக்கு வருவதில்லை.

பணத்திற்கு என்ன செய்வது? எங்கே போவது? என்று வறுமையில் துடிப்பவர்களே அநேகம்பேர் அரசியலுக்கு வருகிறார்கள்.

பணம்தான் நோக்கம். அதற்கு பதவி ஒரு ஊக்கம். புகழ் ஒரு தாக்கம். அதன் மூலமாக பணம் பெறுவது ஏக்கம்.

இப்படிப்பட்ட இலட்சியத்துடன் அரசியல் களம் புகும் ஆற்றல் மிகுந்தவர்களிடம், நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?

ஏதாவது தரத்தையும், தகுதியையும் அங்கிருந்து எதிர்பார்த்தால், தவறு நம்முடையதுதான். அவர்கள் மேல் தவறேயில்லை. பிழைக்கும் வழி - உழைக்கும் நெறி. அவர்களிடம் அப்படித்தானே இருக்கும்.


64. பார்ப்பும் ஈர்ப்பும்

ஒன்றையோ அல்லது ஒருவரிடமிருந்தோ எதையாவது எதிர்பார்க்கும் பொழுது ‘பார்ப்பு’ ஏற்பட்டு விடுகிறது. அந்தப் பார்ப்பில் அதிக ஈர்ப்பும் வந்து விடுகிறது. இந்தப் பார்ப்பும் ஈர்ப்பும் ஒரு வித தீர்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, எரிச்சலையும் ஏமாற்றத்தையும் கொடுத்து விடுகிறது.