பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

71


81. மக்களும் மக்குகளும்

‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்பது தமிழர் பண்பாடு. மன்னன் உயிர் என்பதாகவும் மக்கள் உடல் என்பதாகவும் பெருமையாகப் பேசும்.

மக்களைக் குறிக்க குடி என்ற சொல்லும் உண்டு. குடி என்றால் உடம்பு என்று அர்த்தம்.

உடம்பு மட்டும் உள்ளது. ஆனால் உயிர் இல்லாததற்கு என்ன பெயர்? ஜடம் அல்லது சவம்.

மன்னன் அல்லது மக்களை ஆள்கிற தலைவர்கள். உயிர் என்றால், ஆளப்படுகிற மக்கள் உயிரை எதிர்பார்த்து வாழ்கிற ஜடம்தானே!

அதனால்தான் முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும், மக்களை உயிரில்லாத ஜடங்களாகவே நடத்தினார்கள். இன்றும் நடத்துகின்றார்கள்.

குடி மக்கள் என்றால் நாட்டில் உள்ள இடங்களை நிரப்புகிற மக்கள். அதாவது நடமாடுகிற ஜீவன்கள். அதாவது ஜீவன் இல்லாத ஜீவன்கள். இப்படி உடலாகவே இருந்து உழல்கிறவர்களைப் பார்த்து, மக்களா அல்லது மக்குகளா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

குடிமக்கள் என்றால் உயிர் இல்லாத மக்கள் என்ற நிலையுடன் இன்று குடிக்கும் மக்கள் என்றும் மாறிப் போயிருக்கிறது. ஐயோ! குடியே!

பாவமோ பாவம்.