பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


90. உறக்கம்

உறக்கம் என்பதற்கு தூக்கம், நித்திரை என்பார்கள். இயங்கிக் கொண்டிருக்கிற உடலும் மனமும், ஓய்வெடுத்துக் கொள்கிற ஒரு மயக்க மனோநிலை. இதை (Unconsciousness) என்றும் கூறுவார்கள்.

எல்லோருக்கும் உறக்கம் என்பது இயல்பாக வந்து விடுவதில்லை. புரண்டு புரண்டு பார்த்து போராடி வியர்த்து, புலம்பித் தீர்த்து பிறகுதானாகப் பெறுகிற நிலைதான் தூக்கமாக வரும்.

எப்பொழுது உறக்கம் பெருமை பெறுகிறது? படுத்தவுடன் ஒருவன் தூங்குகிற போதுதான். படுத்தவுடன் எப்படித் தூக்கம் வரும்?

அதற்குப் பதில், அந்த வார்த்தையிலேயே இருக்கிறது பாருங்கள்.

உற என்றால் பொருந்த; கம் என்றால் சந்தோஷம் என்று அர்த்தம். உடலும் மனமு உறவு கொண்டு சந்தோஷமாகப் பொருத்துகிறபோதுதான் சாந்தி தருகின்ற தூக்கம் பூர்த்தியாகிறது.

சந்தோஷம் என்றால், குறையில்லாத உடல், குழப்பம் இல்லாத மனம், உடல் பொருந்த என்றால், கவலையில்லாத சூழ்நிலை.

படுத்தவுடன் தூங்குகிறவன் பாக்கியவான் என்று அதனால்தான் அனுபவப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.