பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

83


93. தக்காளி தர்மம்

என்னை ஒரு கூடை தக்காளிப் பழம் வாங்கி வரச் சொன்னார்கள். பல கடைகளில் புகுந்து, மிகவும் சிரமப்பட்டு, நல்ல பழக்கூடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து 100 பழம் வாங்கிக் கொண்டு வந்தேன். அத்தனைப் பழங்களிலும் ஒரு பழம் நசுங்கி அழுகிய நிலையிலே இருந்தது. இப்படியா பழம் வாங்கி வருவது என்று ஒரு நசுங்கிய பழத்தைக் காட்டி கோபமாகக் கேட்டார்கள் சுற்றியிருந்தவர்கள்.

நல்ல பழங்களாக அதிகம் வாங்கியதற்காகப் பாராட்டவில்லை. ஒரு அழுகிய பழத்திற்காக ஆத்திரமான குற்றச்சாட்டு. ஆயிரம் நல்லது செய்தாலும். ஒரு சிறு தவறு அத்தனை நல்லதையும் கெடுத்து விடுகிறதே! இதுதான் சமுதாய தர்மமாக அமைந்து போயிருக்கிறது. போற்றும் பண்பு தலை தூக்கி எழுந்தால்தான், பொய்யும் தீமையும் புறம் போகும். இல்லையேல் தலையில் அமர்ந்து ஆகடியம்தான் செய்யும்.


94. அளவோடு பெற்று வளமோடு வாழ்க

குழந்தைச் செல்வங்களை அளவோடு பெற்று, வளமோடு வாழ்க என்று வாழ்த்துவது இன்று பெரியவர்களிடையே பெருமைமிகு வழக்கமாக இருக்கிறது. அளவோடு பெறுவது என்றால் குழந்தைகள் எண்ணிக்கைதான் எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறது. குழந்தைகளால் அவ்வப்போது மகிழ்ச்சி ஏற்படலாமே தவிர, வளம் வந்து விழுகிற அளவுக்கு வாய்ப்பில்லை.