பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துளிர்க்கிறது என்பதைக் காண உற்சாகமிருக்கத்தானே செய்யும். அதற்காக மன்னிப்பு,

நிற்க, கைலங்கிரியில் நடந்த கதையை என்ன அழகாக ஜோடித்து விட்டாய். சிதம்பரச் செய்யும் கோவையிலே பிரபஞ்ச உற்பவமும் ஒடுக்கமும், ஈசன்-பார்வதி விளையாட்டாக, அம்மை சிற்றில் கட்டுவதும் ஈசன் அழிப்பதுமாக ஒரு கற்பனை, அது ஒரே பாட்டு. ஆனால் இங்கோ நிஜமான அநாயசமான விளையாட்டு. குழந்தைகள் விளையாட்டல்ல. காதல் விளையாட்டு, கண்ணைப் பொத்தவும் காரிருள் படர்ந்த கதை பயமாக பிறகு விளையாட்டாக அமைந்திருப்பது நயமாக இருக்கிறது.

இந்தப் பாட்டுகள் எல்லாவற்றிலும் அமைந்த ஏக்கமும் அழகும் ஒரு விசித்திரமான கலவை. தமிழுக்குப் புதிது. எந்த விதத்தில் என்றால், அழகோடு ஆனந்தம் வரும். இருளோடு துயரத்தின் சாகை வரும்; தனித்தனியாக அமைவதை விட்டு, இரண்டும் தாமரை இலையில் உருளும் தண்ணீர் போல அழகை வாரி வீசுகிறது.

இப்படிக்கு உனது,
சா. வி.

64