பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

புதுமைப்பித்தன் கதைகள்



(தொகுதி விபரீத ஆசை.பக்.54 - 55)

இந்தக் கதையில் வி,பி. என்ற எழுத்தாளக் கதாபாத்திரத்தின் மூலம் ஆத்திரத்தோடு விமர்சிக்கப்படும் புரொபஸர் சிதம்பரலிங்கம் என்ற கதாபாத்திரம் வேறு யாருமல்ல, ரா.ஸ்ரீ. தேசிகன்தான், தமது கதைகளைப்பற்றி விஷமத்தனத்தோடு முன்னுரை எழுதிய தேசிகனின் மீதிருந்த கோபத்தை இவ்வாறு தீர்த்துக் கொண்டார் புதுமைப்பித்தன். -

தமது தொகுதிக்குத் தமக்குத் தெரியாமல் நவயுகப் பிரசுராலயத்தின் பதிப்பாசிரியர் தேசிகனிடமிருந்து முன்னுரையை வாங்கி வெளியிட்டுவிட்டார் என்ற காரணத்தினால்தான். 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற நூலைத் தொடர்ந்து, அதே பிரசுராலயம் வெளியிட்ட ஆறு கதைகள், பக்த குசேலா, நாசகாரக் கும்பல் ஆகிய புதுமைப்பித்தனின் மூன்று நூல்களிலும் எந்தவிதமான முன்னுரையோ. பதிப்புரையோ கூட, இடம் பெறாமல் புதுமைப்பித்தன் பார்த்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சொல்லப்போனால், புதுமைப்பித்தன் தமது நூல்களுக்கு எவரிடமும் முன்னுரை வாங்கி வெளியிடுவதை விரும்பவில்லை. இதன் பின் அவரது காலத்தில் வெளிவந்த காஞ்சனை, ஆண்மை ஆகிய கதைத்தொகுதிகளுக்கு அவரேதான் முன்னுரை எழுதினாரேயொழிய, வேறு யாரிடமும் முன்னுரை 'வாங்கவில்லை; வாங்குவதை அனுமதிக்கவும் இல்லை.

இங்கு ஓர் ரகசியத்தைக் கூறிவிடுகிறேன். நான் எழுதியுள்ள புதுமைப்பித்தன் வரலாற்று நூலில், புதுமைப்பித்தன் தமது நூல்களை வெளியிட்டு வந்த பதிப்பாசிரியர் ஒருவரை நோக்கி ஒருமுறை பின்வருமாறு கோபத்தோடு கூறினார் என்று எழுதியுள்ளேன்.

'உம்மால் என் பிள்ளையைக் கொன்றேன்
'உமக்காக என் புத்தகத்தைக் கொன்றேன்
'உமக்காக நான் என்னையே கொன்று கொள்ளத்
தயாராயில்லை ' (முதற்பதிப்பு. பக்.115)

இவ்வாறு புதுமைப்பித்தனிடம் வாங்கிக் கட்டிய பதிப்பாசிரியர் வேறு யாரும் அல்ல, புதுமைப்பித்தனுக்குத் தெரிவிக்காமலே தேசிகனிடம் 'புதுமைப்பித்தன் கதைகளுக்கு முன்னுரை வாங்கி வெளியிட்ட ப.ராமஸ்வாமிதான்!