பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆசிரியர் முன்னுரை புதுமைப்பித்தன் தமிழ்ச்சிறுகதை உலகம் கண்ட தலைசிறந்த சிறுகதை ஆசிரியர்; தமது புனைபெயருக்கேற்ப, தமிழ்ச் சிறுகதைத் துறையில் தமக்கே உரித்தான புதிய தடத்தை வகுத்தவர்; இதன்மூலம் பாரதி பரம்பரை எனக் கூறப்படுவது போல், புதுமைப்பித்தன் பரம்பரை எனக்கூறத்தக்க வகையில், தமது வழியில் பல புதிய சிறுகதை எழுத்தாளர்கள் உருவாவதற்குப் பிதாமகராகவும் உந்து சக்தியாகவும் விளங்கியவர். இதன் காரணமாக அவர் மறைந்து இப்போது. அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும்கூட, இன்னும் அழியாத புகழோடு நிலைத்து நிற்பவர். என்றாலும், புதுமைப்பித்தன் காலத்தில் அவரது சக எழுத்தாளர்களாக இருந்த சிலரே, அவர் மறைந்ததற்குப் பின்னால், அவரது இலக்கிய மதிப்பையும் அந்தஸ்தையும் சாதனைகளையும் குறைத்து மதிப்பிட்டு, வேறு சிலருக்கு ஏற்றம் அளிக்கும் காரியத்தை, இலக்கிய விமர்சனம் என்ற பெயரால் மிகவும் நாசூக்காகவும் மறை முகமாகவும் விஷமத்தனமாகவும் செய்து வந்துள்ளனர். அத்துடன் நில்லாமல், அவரது மறைவுக்குப் பின்னால், அவரது பெயரால் வெளிவந்த புதிய ஒளி' என்ற கதைத் தொகுதியில் மாப்பஸான் தழுவல் கதைகள் சில இடம் பெற நேர்ந்த காரணத்தினால், அவரது சொந்தக் கதைகள் சிலவற்றையும் பிறநாட்டுக் கதைகளின் தழுவல்கள் எனக் கூறி, அவரை ஒரு தழுவல் இலக்கிய கர்த்தா , இலக்கியத் திருட்டுச் செய்தவர் என்றெல்லாம் குற்றம் சுமத்தவும் சிலர் அரும்பாடுபட்டு வந்துள்ளனர். இந்தப் பிரச்சினை தமிழ் இலக்கிய உலகில் பத்திரிகை வாயிலாக் வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுவதற்கு வழிகோலிவிட்டது என்பதைத் தமிழ்நாட்டு இலக்கிய வாசகர்கள் அறிவார்கள். அந்த விவரங்களைக் கூறப்புகுந்தால், அதுவே ஒரு தனிப்புராணம் ஆகிவிடும். - புதுமைப் பித்தனோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்தவன் என்ற முறையிலும், அவரது வரலாற்றை எழுதியவன் என்ற முறையிலும், மேற்கூறிய குற்றச்சாட்டுக்களின் மெய்மை அல்லது பொய்மைகளை ஆதார பூர்வமாகக் கண்டறிந்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அதற்கு ஒரு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியதோடு, ' விமர்சனம் என்ற பெயரால் 'புதுமைப்பித்தனின் மேதைமையையும் சாதனைகளையும் சிலர் குறைத்து மதிப்பிட முனைந்ததற்கான காரண காரியங்களையும்