பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் - தமிழ் உரைநடையின் சிகரமாகி, அகில உலகிற்கும் தமிழின் பெருமையை எடுத்துக்காட்டி நிற்கின்றது' (பக்:52) என்று எழுதிவிட்டு, புதுமைப்பித்தனின் அன்று இரவு, சாபவிமோசனம், கபாடபுரம் ஆகிய கதைகளைக் குறிப்பிட்டு. இக்கதைகளில்; 'இலக்கியப் பொருளில் மாத்திரமல்லாது, நடையிலும் இலக்கியச் செம்மையைக் காணக்கூடியதாக விருக்கின்றது. மேலே குறிப்பிட்ட சிறுகதைகளில் வரும் உரைநடை தமிழ்ச் செய்யுள் மரபின் இனித்த சாறாகவே இருக்கின்றது' (பக்:53) என்றும் எழுதியுள்ளார். - இதேபோல் கு. அழகிரிசாமியும் பின்வருமாறு எழுதியுள்ளார்: 'வ.வே.சு. ஐயர் போன்றவர்களால் இலக்கியத்துக்கேற்ற வசனமும், பதுமைப்பித்தன் போன்றவர்களால் வசனத்துக்கேற்ற இலக்கியமும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. தமிழிலுள்ள வசன இலக்கியங்களில் தலைசிறந்ததாக இருப்பது. புதுமைப்பித்தனின் இலக்கியமே. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதைக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் பாரதி; தமிழ் வசனத்துக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் புதுமைப்பித்தன். ஆனால் பாரதிக்கு முன் தமிழில் மிகச்சிறந்த கவிச்செல்வங்கள் இருந்தன. புதுமைப்பித்தனுக்கு முன் மிகச் சிறந்த வசனச் செல்வங்கள் இருந்தன என்று சொல்ல முடியாது. புதுமைப்பித்தனின் இலக்கியம் தமிழ்நாட்டு வசன இலக்கியத்தின் சொத்து; அவர் வசன இலக்கிய மன்னர்'. (நான் கண்ட எழுத்தாளர்கள் பக். 81-82), - பன்மொழிப் புலவரான தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும் புதுமைப்பித்தனைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்: 'புதுமைப்பித்தனில் சிறுகதை கவிதையோடு போட்டி போடத் தொடங்குகிறது. அவரது சொல்லாட்சி, ஓசை நயம், குறிப்புப் பொருள், கண்ணோட்டம் ஆகியவை, அத்தனை 'கவர்ச்சி - மிக்கனவாக உள்ளன' (Contemporary Indian Literature) சாகித்திய அகாடமி வெளியீடு. பக்.249) ஆனால் தேசிகன் கூறியுள்ளது என்ன? 1959 ஜூலையில் புதுமைப்பித்தனின் பதினொன்றாவது நினைவுநாளை ஒட்டி, சி.சு.செல்லப்பா தமது 'எழுத்து' இதழைப் புதுமைப்பித்தன் நினைவு இதழாக வெளிக் கொணர்ந்து, அதில் புதுமைப்பித்தன் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை இடம்பெறச் செய்திருந்தார், அவற்றில் தேசிகன் எழுதிய இரண்டு பக்கக் கட்டுரையும் ஒன்று. தலைப்பு: 'சொ.வி.யின் உரைநடை.'