பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

லட்சியத்துக்காக ‘மணிக்கொடியில்’ எழுதிக் கொண்டு, பணத்துக்காக சிரமப்பட்டு வந்த காலத்தில் புதுமைப்பித்தனுக்கு மாதம்தோறும் சம்பளம் கிடைக்ககூடிய ஒரு வேலை வாய்த்தது. ‘ஊழியன்’ என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலை அவருக்குக் கிடைத்தது.

ராய. சொக்கலிங்கம் என்ற அறிஞர் சமூக சீர்திருத்த விஷயங்களிலும் அக்கறை கொண்டிருந்தார். பழந்தமிழ் இலக்கியத்திலும் பற்றுடையவர். அவர் ‘ஊழியன்’ என்ற பத்திரிகையைக் காரைக்குடியில் நடத்தி வந்தார். சமூக சீர்திருத்தம், பழந்தமிழ் இலக்கியம் முதலியவற்றில் ஆர்வம் காட்டிய ஊழியன் தற்காலப் பாங்கான கதைகளையும் கட்டுரைகளையும் பிரசுரித்து வந்தது. அதன் போக்கு புதுமைப்பித்தனுக்கு ஒத்தது இல்லைதான். எனினும், ஒன்றும் இல்லாததற்கு இந்த வேலை மேல்தானே என்ற எண்ணத்துடன் அவர் அதை ஏற்றுக் கொண்டார். புதுமையான கதைகளை எழுதி வெளியிட்டார்.

ஆயினும், அவருக்கும் ‘ஊழியன்’ அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த மற்றொரு உதவி ஆசிரியருக்கும் ஒத்துப் போகவில்லை. மேலும், அந்த அலுவலகச் சூழ்நிலை புதுமைப் பித்தனின் சுதந்திர போக்கிற்கு இடைஞ்சலாக இருந்தது. எனவே, அவர் அந்த வேலையை உதறி எறிந்துவிட்டு மறுபடியும் சென்னை வந்து சேர்ந்தார். ‘காந்தி’, மணிக்கொடி ஆகிய வாரப் பத்திரிகைகள் இலட்சிய வேகத்தோடு தோன்றி, சோதனைகளை மேற்கொண்டு, கஷ்ட திசையிலேயே நடந்துவந்தன. அரசியல், சமூக சீர்திருத்தம், தனிமனிதப் பண்பாட்டு உயர்வு போன்ற விஷயங்களுடன் இலக்கியத்திலும் இவை உற்சாகம் காட்டிவந்தன. 1934-ல் ‘காந்தி’ பத்திரிகை ‘மணிக்கொடியுடன்’ இணைக்கப்பட்டது.

‘மணிக்கொடி’ இலக்கியத்தில் பல சோதனைகளைச் செய்தது. வ.ரா. சிந்தனைக் கட்டுரைகளுடன் நடைச்சித்திரம் என்ற புதுரகமான உரைநடைப் படைப்பை எழுதி வந்தார். தமிழ்ச் சிறுகதைக்கு இலக்கிய கனமும், உலக இலக்கியரீதியான பல்வேறு தன்மைகளும் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எழுத்து முயற்சியில் ஈடுபட்ட பல உற்சாகிகளின் ஒத்துழைப்பு 'மணிக்கொடி'க்குக் கிடைத்தது. புதுமைப் பித்தன் பி.எஸ். ராமையா. ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சிட்டி, சி.சு. செல்லப்பா முதலியவர்கள் அவர்கள்.

இவர்கள் அனைவரது திறமையும் உழைப்பும் ‘மணிக்கொடி’க்கு ஒரு தனித்தன்மையைக் கொண்டு சேர்த்தன. ஆயினும் பத்திரிகையின் பொருளாதார நிலைமை எப்போதும் மோசமாகத்தான் இருந்தது.