பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 எனவே, ‘மணிக்கொடி’யை நிர்வகித்து நடத்திய கே. சீனிவாசன் பம்பாய் போனார். பாம்பே ஸ்டாண்டர்ட் என்ற பத்திரிகைக்கு ஆசிரியரானார். டி.எஸ். சொக்கலிங்கம் சென்னையில் தினமணி நாளிதழின் ஆசிரியரானார். வ.ரா. கொழும்பு சென்று ‘வீரகேசரி’ பத்திரிகைக்கு உதவி ஆசிரியரானார்.

வாரப் பத்திரிகையாகப் பல நோக்குகள் கொண்டு வெளி வந்த ‘மணிக்கொடி’ பி.எஸ். ராமையாவின் முயற்சியால் தனிக் கதைப் பத்திரிகையாக, மாதம் இருமுறை வெளிவரும் ஏடாக மாற்றப்பட்டது. ராமையா அதன் ஆசிரியரானார். அவர் திறமை மிகுந்த கதாசிரியர். நல்ல கதைகளைத் தேர்ந்து, திறமையாக ‘எடிட்’ செய்து பிரசுரிப்பதில் அவர் தீவிர உற்சாகம் காட்டினார். புதுமைப்பித்தனும் மற்றும் இலக்கிய உணர்வும் எழுத்தாற்றலும் கற்பனைத் திறனும் உலக இலக்கிய ஞானமும் பெற்றிருந்த படைப்பாளிகள் பலரும் (ந.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், 'சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், சி.க. செல்லப்பா, ந. சிதம்பர சுப்பிரமணியன், கி. ரா. என்ற கி. ராமச்சந்திரன், மெளனி, க. நா. சுப்பிரமணியன் முதலியோர்) ஆழமும் அழகும், அழுத்தமும் கனமும் நிறைந்த கதைகள் எழுதினார்கள். இவர்கள் பிற்காலத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்கள். இவர்களிடையே புதுமைப்பித்தன் தனிப் பெருமை பெற்று விளங்கினார்.

‘மணிக்கொடி’ இலக்கிய ரசிகர்களின் கவனிப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரிய பத்திரிகையாக வெளிவந்த போதிலும், அதன் பொருளாதார பலம் வலுப்பெறவில்லை. ஒவ்வொரு இதழையும் தயாரித்து வெளியிடுவதற்கு அதைச் சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் அனுபவித்த கஷ்டங்களை பி.எஸ். ராமையா ‘மணிக்கொடி காலம்’ என்ற தனது நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தன் அவருக்குத் துணையாக இருந்து ‘மணிக்கொடி’யை வளர்ப்பதற்குத் தன்னாலான உதவிகளைச் செய்து வநதார்.

என்றாலும், பத்திரிகையை, ஒழுங்காக, காலநியதி தவறாது பிரசுரிக்க இயலவில்லை. காலதாமதமாக வந்து, இடையிடையே சில இதழ்கள் வெளிவர முடியாமல் போய், 1936ல் ‘மணிக்கொடி’ நின்று விட்டது. -

புதுமைப்பித்தன் தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் யோசனையை ஏற்று, தினமணி நாளிதழின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார்.