பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பத்திரிகைகள் அதற்கு முன்போ பின்போ கிடையாது. அன்று மறு மலர்ச்சி என்ற ஒரு வார்த்தை புதிய வேகமும் பொருளும் கொண்டது. அதைச் சிலர் வரவேற்றார்கள். பலர் கேலி செய்தார்கள். பெரும்பான்மையோர் அதைப்பற்றி அறியாதிருந்தார்கள். மணிக்கொடி பொருளாதார நிர்ப்பந்தம் என்ற நபரால் சிசுஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற முனிசிபல் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது. மூச்சுப் பேச்சுற்றுக் கிடந்த அந்தக் குழந்தையை எடுத்துவந்து, ஆசை என்ற ஒரே அமுதுாட்டி வளர்ப்பதற்காக நானும், பி.எஸ். ராமையா என்ற நண்பரும், எங்களைப்போலவே உற்சாகத்தை மட்டும் மூலதனமாகக் கொண்ட இன்னும் சில எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம். அது இரண்டு மூன்று வருஷங்களில் கன்னிப் பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில் அதைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஒடும் நண்பரைப் பெற்றோம். அவர் அவளை ஒருவனுக்கு விற்றார். விற்றவுடனே அவளுக்கு ஜீவன்முக்தி இந்தக் கலிகாலத்தில் கிடைத்தது. இது தான் மணிக்கொடியின் கதை. இதுதான் தமிழில் புதிய பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோட்டைகட்டியவர்களின் ஆசையின் கதை’

இவ்வாறு ‘மணிக்கொடி’யின் முடிவைப்பற்றி புதுமைப் பித்தன் எழுதியிருக்கிறார்.

நவயுகப் பிரசுராலயம் தொடர்ந்து புத்தகங்கள் பிரசுரித்தது. புதுமைப்பித்தன் ‘மணிக்கொடி’யில் எழுதிய கதைகளில் 29 கதைகளைத் தொகுத்து ‘புதுமைப்பித்தன் கதைகள்’ என்று வெளியிட்டது. அவர் மொழிபெயர்த்திருந்த கதைகளைத் தொகுத்து உலகத்துச் சிறுகதைகள் என்ற புத்தகமாய் பிரசுரித்தது. மேலும், ஆறுகதைகள், ‘நாசகாரக்கும்பல்’,‘பக்த குசேலா’ என்று சிறு சிறு வெளியீடுகளாகவும் பிரசுரம் பெற்றன. இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் வாழ்க்கை வரலாறு பேஸிஸ்ட் ஜடாமுனி என்ற பெயரில் வெளிவந்தது. இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் பெயர்

சொ. விருத்தாசலம், பி.ஏ. என்று குறிக்கப்பட்டிருந்தது. சொ. விருத்தாசலமும், ந. ராமரத்னமும் சேர்ந்து எழுதிய சர்வாதிகாரி ஹிட்லரின் வரலாறு, கப்சிப் தர்பார் என்ற புத்தகமாக வெளிவந்தது.

புதுமைப்பித்தன் பெயர் வாசகர்களிடையே நன்கு அறிமுகமாவதற்கும். அவருடைய புகழ் வளர்வதற்கும் இப்புத்தகங்கள் பெரிதும் உதவின. இதன்மூலம் நவயுகப் பிரசுராலயம் புதுமைப்பித்தனுக்கு உதவி புரிந்ததோடு, நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் நல்ல முறையில் -