பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 அத்துடன், அலுவலக உறவுகளிலும் ஏதேனும் சில சிக்கல்கள் முளைத்திருக்கவும் கூடும். எப்படியோ, ‘தினசரி’ப் பத்திரிகைக்காக உழைத்தது போதும் என்ற மனநிலை புதுமைப்பித்தனுக்கு ஏற்பட்டு விட்டது. அதனால் அவர் அந்த வேலையை உதறிவிட்டு, சுதந்திர எழுத்தாளராக வெளியேறினார். சிறிது காலத்துக்குப் பிறகு அவர் சினிமாத் துறையில் பிரவேசித்தார்.

1946-ல் அவருக்கு சில சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. அந்நாட்களில் திரைப்படி உலகில் மிகுந்த கீர்த்தியோடு விளங்கிய எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோ அவ்வையார் கதையைப் படமாக்க முனைந்தது. அதற்குக் கதை வசனம் எழுதுவதற்கு முதலில் புதுமைப்பித்தன் தான் அழைக்கப்பட்டார். ஜெமினி கதை இலாகாவைச் சேர்ந்த கி.ராவும் புதுமைப்பித்தனும் சேர்ந்து எழுதுவது என்று திட்டமிடப்பட்டது. புதுமைப்பித்தன் உற்சாகத்தோடு கதை வசனம் எழுதினார்.

ஆயினும், அவர் எழுதிக் கொடுத்தவை அவ்வையார் படத்துக்காகப் பயன்படுத்தப்படவில்லை. அவருக்கு சிறிதளவு பணம் கிடைத்தது. அவ்வளவுதான். சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜமே.

ஜெமினி ஸ்டுடியோவில்,‘முருகதாஸா’ என்று பெயர் பெற்றிருந்த ஏ.முத்துஸ்வாமி சினிமா டைரக்டராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரது உதவியினால், மற்றொரு படத்துக்குக் கதை வசனம் எழுதுகிற பொறுப்பு புதுமைப்பித்தனுக்குக் கிடைத்தது. காமவல்லி என்பது படத்தின் பெயர். அதற்கு அவருக்கு தாராளமாகவே பணம் தரப்பட்டது. அந்தப் படம் பூர்த்தியாகி உரிய காலத்தில் திரைக்கும் வந்தது.

புதுமைப்பித்தனிடம் தாராளமாகப் பணம் புரண்டது. ஒளிமயமான எதிர்காலத்தில் அவருக்கு நம்பிக்கை உண்டாயிற்று. அவர் இஷ்டம்போல் செலவுகள் செய்து சந்தோஷமாக இருந்தார். சினிமாத்துறையின்மூலம் நிறையப் பணம் கிடைத்த பின்னர் இலக்கியப் பணியில் உற்சாகமாக ஈடுபடவேண்டும். அதற்காக ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்றெல்லாம் அவர் கனவுகள் வளர்த்தார். அந்தப் பத்திரிகைக்கு ‘சோதனை’ என்று பெயர் வைக்கவேண்டும் என்றுகூட அவர் திட்டமிட்டார்.

மனிதர்கள் ஆசைப்படுவதுபோல் எல்லாம் வாழ்க்கையில் நடந்து விடுகிறதா என்ன? புதுமைப்பித்தனும் ஏமாற்றங்களையே எதிர் கொள்ள நேரிட்டது.

1946 அவருக்குச் சிறிது பிரகாசமான காலமாக இருந்தது. அடுத்த வருடம் அப்படி அமையவில்லை. ஏதோ பட சான்ஸ் கிடைத்தது. ஆனாலும் பலனில்லாத வேலை.