பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அவர் ஒரு படத்துக்குக் கதை வசனம் எழுதினார். ஆனால், அவருக்குப் பணம் வந்து சேரவில்லை. படத் தயாரிப்பாளரிடம் பணம் இல்லை. எனவே, படம் உருவாக வழி பிறக்கவில்லை.

1946-ல் புதுமைபித்தன் சொந்தமாகத் திரைப்படம் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். போதிய பண வசதி இல்லாதிருந்தும், சினிமாத்துறை சம்பந்தப்பட்ட சிலரது மயக்கு வார்த்தைகளுக்கு ஆட்பட்டு, படத் தயாரிப்பாளராகத் துணிந்தார் அவர்.

‘பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்’ என்பது அவரது கம்பெனியின் பெயர். தனது தாயின் நினைவாக அவர் அந்தப் பெயரை வைத்திருக்கலாம். அவர் படம் எடுக்கத் திட்டமிட்ட குற்றாலக் குறவஞ்சி கதை படத்தின் பெயர் ‘வசந்தவல்லி’ என்று தீர்மானமாயிற்று. அது சம்பந்தமான விளம்பரங்கள் சில பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. அத்துடன் சரி.

புதுமைப்பித்தனுக்கு வீண் பணச் செலவும் கடன் தொல்லையும் தான் இந்த சொந்தப்பட முயற்சியின் விளைவாக ஏற்பட்டன. மீண்டும் வறுமை நிலையும் துயரங்களும் அவர் வாழ்க்கையில் கவிந்தன.

பல மாதங்கள் அவர் மிகவும் சிரமப்பட நேர்ந்தது. அந்த நிலையிலேதான் ‘பாகவதர்’ படத்துக்குக் கதை வசனம் எழுதும் ‘சான்ஸ்’ அவரைத் தேடி வந்தது.

அந்நாட்களில் கீர்த்தி பெற்று விளங்கிய நட்சத்திர நடிகர்களில் எம்.கே. தியாகராஜ பாகவதரும் ஒருவர். ‘பாகவதர்’ என்றால் அவரையே குறிக்கும் அளவுக்கு அவர் தமிழ்நாட்டில் புகழ் பெற்றிருந்தார். அவர் ‘ராஜமுக்தி’ என்ற சொந்தப் படம் ஒன்று தயாரித்தார். அதற்காகப் புதுமைப்பித்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மறுபடியும் அவர் கைக்குப் பணம் வந்தது. அவர் மீண்டும் மகிழ்ச்சிப் பெருக்கோடு செயல்புரியலானார். வசதிகள் மிகுந்த பெரிய ஒட்டலில் மனைவியுடன் தங்கினார். கதை வசனம் எழுதும் வேலையை உற்சாகத்துடன் கவனித்தார்.

1947 பிற்பகுதியில் ராஜமுக்தி படத் தயாரிப்புக் குழுவினரோடு புதுமைப்பித்தன் புனாவுக்குப் போனார். புனா நகரில், வசதிகள் இல்லாத சூழலில், அவர் மிகுந்த கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்று. கொடிய காச நோய் அவரைப் பற்றிக் கொண்டு, வேகமாக வளர்ந்தது. ஆதியிலேயே அவருக்கு இருமல் அடிக்கடி தொல்லை கொடுப்பது உண்டு. ஆனால் அதைக் கொடிய காச நோய் என்று