பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழ்ச் சிறுகதைத் துறையில் பெரியதொரு புரட்சியை உண்டாக்கியவர் புதுமைப்பித்தன். அவருக்கு முன்பு மிக மெதுவாக வளர்ந்து வந்த தமிழ்ச் சிறுகதை சம்பிரதாய ரீதியிலேயே நடை போட்டுக் கொண்டிருந்தது.

அடுக்கடுக்கான சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மனிதனின் மேதையை, தெய்வீகத் துயரத்தை வீரத்தை எல்லாம் கதைகளில் சித்திரித்துக் கொண்டிருந்தார்கள் சில எழுத்தாளர்கள். இலட்சியத்தை உருவாக்குவதும், சீர்திருத்த எண்ணங்களை வலியுறுத்துவதும் அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது. வாழ்க்கையை அதன் தன்மைகளிலும் இலக்கியத்தில் படம் பிடித்துக் காட்ட எழுத்தாளர்கள் முன்வரவில்லை.

1930-களில் சிறுகதை உலகில் ஒரு புதுயுகம் பிறந்தது.

அது குறித்து புதுமைப்பித்தன் இவ்வாறு விவரிக்கிறார்

‘ஒரு பேரலை’ எழுந்தது. அதில் தான் சிறுகதை தமிழில் பூரண வடிவம் பெற்றது. இதைச் சிறப்பாக மணிக்கொடி யுகம் என்று சொல்ல வேண்டும். இக்காலத்தில்தான் சிறுகதைக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது. வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை. சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பித்தது. பரமசிவன் வந்து வந்து வரங்கொடுத்துப் போவான், பதிவிரதைக் கின்னல் வரும் பழையபடி தீரும் என்றிருந்த நிலைமை மாறி, நிலாவும் காதலும் கதாநாயகனுமாக சோபித்த சிறுகதைகள் வாழ்வை, உண்மையை, நேர்நின்று நோக்க ஆரம்பித்தன.

மனிதனின் மேன்மைகளை, உயர்ந்த பண்புகளை, இலட்சியங்களை மட்டுமல்லாது அவனது குறைபாடுகளை, குணக்கேடுகளை, சிறுமைகளை, சீரழிவுகளை, வக்கிரங்களை, மற்றும் மனித சமூகத்தின் அவலங்களை அக்கிரமப் போக்குகளை எல்லாம் கதைகளில் சித்திரித்துக் காட்ட வேண்டும் என்ற உணர்வு படைப்பாளிகளுக்கு ஏற்பட்டது. உலக இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த சில எழுத்தாளர்கள், தமிழ்ச் சிறுகதையையும் உலக இலக்கியத்தின் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற ஆசையோடு எழுதலானார்கள்.