பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘பசி ஐயா பசி பத்தும் பசி வந்திடப் பறந்துபோம் என்று வெகு ஒய்யாரமாக, உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே! அங்கு நீர் ஒரு நாள் இருந்தால், உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்

இருட்டில் விபசாரம் நடப்பதை சுட்டிக்காட்டி, நாசூக்காகக் கண்ணை மூடவேண்டாம். நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்ளின் ஷர்ட்டு, உங்கள் ஷெல்பிரேம் கண்ணாடி, எல்லாம்அவர்கள் வயிற்றில் இருக்கவேண்டியதைத் திருடியதுதான்.

இப்படிக் குத்தலாக உண்மைகளை அங்கங்கே சிதறிச் செல்வது அவருடைய பாணி. ‘கண்கள் இருப்பது எதையும் பார்ப்பதற்குத்தான் என்ற இரும்புத் தத்துவம் பெற்றிருக்க வேண்டும்’ என்று குறிப்பிடும் அவர் கண்களால் கண்டவற்றை எல்லாம் கதைகளில் எடுத்துச் சொல்ல வேண்டியதுதான் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்.

அதனால்தான். நோயாலும் பசியாலும் கஷ்டப்படுகிற புருஷனுக்குப் பால்கஞ்சி வார்ப்பதற்காக இருட்டில் ஒரு சந்தில் ஒரு அந்நியனுடன் மறைந்து சோரம்போய் முக்கால் ரூபாய் சம்பாதிக்கிற மில் கூலி அம்மாளுவையும் (பொன்னகரம்)

இருட்டுப் பாதையில் நின்று, வழியோடு போகிறவனை, 'என்னய்யா கம்மா போரே வாரியா என்று கூப்பிடும் தெரு விபசாரியையும் (கவந்தனும் காமனும்), அவர் தனது கதைகளில் அறிமுகப்படுத்தினார்.

அந்தக் காலத்தில் இந்தப் போக்கு வெகு துணிச்சலானது, புரட்சிகரமானது என்பதில் சந்தேகம் இல்லை. இக்கதைகள் மிகுந்த எதிர்ப்பையும், கண்டனத்தையும், வெறுப்பையும் பெற்றன. எனவே தான், மனிதனின் சிறுமைகளையும், தப்பிதங்களையும், வக்கிர விசித்திரங்களையும் கதைகளில் சித்திரிப்பது குற்றமோ பாபமோ ஆகாது என்று புதுமைப்பித்தன் வாதாட வேண்டியதாயிற்று.

அந்நாட்களில் இதர எழுத்தாளர்கள் தொடத் தயங்கிய விஷயங்கள் பலவற்றையும் புதுமைப்பித்தன் தனது கதைகளுக்குப் பொருளாக்கி, தனது நோக்கில், அனுதாபத்தோடு அல்லது கேலியும் நையாண்டியுமாக, அல்லது நம்பிக்கை வறட்சியோடு எழுதினார்.

விதவைகளுக்கு மறுமணம், கலப்புத் திருமணம் ஆகியவை சீர்திருத்த நோக்குடன் பிரசாரம் செய்யப்பட்டு வந்த காலம் அது. அந்தச் சமயத்தில், கலப்புத் திருமணத்தைப் பரிகசிப்பதுபோல் அவர் கோபாலய்யங்காரின் மனைவி என்ற கதையை எழுதினார்.