பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாங்களும் எங்களிடம் கடன்பட்டவர்களுக்கும் மன்னிக்கிறோமே’ என்று பிரார்த்தித்தார்.

அந்த அஞ்ஞானி வண்டிக்காரனைப் பற்றி அவருக்கு ஞாபகமேயில்லை என்று கதையை முடிக்கிறார் புதுமைப்பித்தன்.

இத்தகைய முரண்பாடு-பேசுவது ஒன்றும் செய்வது வேறாகவும் இருக்கிற போக்கு-சகல தரத்தினர் வாழ்விலும் காணப்படுவதை அவருடைய கதைகள் எடுத்துக்காட்டுகின்றன.

பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த பெரிய மனிதர்கள் சிலர் வாழ்க்கைபற்றியும், பேதங்கள் குறித்தும் உயர்ந்த தத்துவங்களைப் பேசி மகிழ்கிறார்கள். வாழ்க்கை என்ற கதையில் திடீரென்று பெரும் மழை பிடித்துக் கொள்கிறது. பயந்து, ஒதுங்கி நிற்பதற்காக ஒரு குளுவச்சி, குழந்தையுடன் அவர்கள் நின்ற பொது இடத்திற்கு ஒடிவருகிறாள். ‘மூதேவி, இங்கே எங்கே வந்து ஏறுதே, ஒடிப்போ’ என்று விரட்டுகிறார்கள், பேதங்கள் இல்லாத நிலைபற்றிப் பெரும் பேச்சுப் பேசியவர்கள்.

மனித வாழ்க்கையே முரண்பாடுகள் நிறைந்ததுதான். சுயநல நோக்குடன் செயல்புரிகிறவர்களின் போக்கில் மட்டும் தான் முரண்பாடுகள் நிலவும் என்றில்லை. எதிர்பாராத இடங்களில், எதிர் பாராத சந்தர்ப்பங்களில், எதிர்பார்க்க முடியாத நபர்களின் மன நிலைகளிலும் முரண்பாடு தலைகாட்டும்; சில மனிதர்களை அதிசயமான முறைகளில் செயல்புரியும்படி செய்யும். வாழ்க்கையில் காணக் கிடக்கிற இந்த நியதியையும் புதுமைப்பித்தன் கதைகள் சில அழகாக எடுத்துக் காட்டுகின்றன.

கொள்ளை அடிப்பதையே தொழிலாகக் கொண்டவன் சங்குத் தேவன். அந்தக் கொள்ளைக்காரனை எண்ணி, பயந்து பயந்து நடந்த கிழவியிடம் பேச்சுக் கொடுத்து, அவளது நிலைமையை அறிந்து கொள்கிறான். அவன் தன் பணப்பையை அவளுக்குத் தந்து, இதை வச்சுக்கக்க, முதல் பேரனுக்கு என் பேரிடு-சங்குத் தேவர்னு என்று கூறுகிறான். இதுவும் ஒரு வேடிக்கைதான் என்று தானே எண்ணிக் கொள்கிறான் (சங்குத் தேவன் தர்மம்).

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட புரட்சிக்காரன் ஒருவன் எழுதியவற்றைப் பறிமுதல் செய்கிறார் ஜெயில் சூப்பிரண்ட் பரமேஸ்வரம். அக் காகிதங்களைப் படித்து அவன் எழுத்தினால் வசீகரிக்கப் படுகிறார். புரட்சிக்காரனை சந்திப்பதற்காக இருட்டில் துணிந்து வந்த அவன் காதலியிடம் காகிதக் கத்தையைக் கொடுத்து அவளைப் போகச்