பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சொல்கிறார். புரட்சிக்காரனின் எழுத்தைக் காப்பாற்றிய பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட காகிதக் குப்பை உளறல்களாக இருந்ததால் அழிக்கப்பட்டது. என்று ரிப்போர்ட் எழுதிவிடுகிறார் ('பறிமுதல்)

வாழ்க்கை விசித்திரமானது; அதில் எதுவும் நடக்கலாம்; மனிதர்கள் பிறர் எதிர்பாராத வகையில் செயல்புரிந்துவிடுகிறார்கள் என்பதை இத்தகைய கதைகள் விவரிக்கின்றன. அதுபோன்ற சந்தர்ப்பங்களில், மனிதனின் குணமாண்புகள் எடுப்பாகப் பிரகாசிப்பதையும் புதுமைப் பித்தன் சில கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

வறுமையால் கஷ்டப்படுகிற ரங்கநாதம், சம்பளத்தை எதிர்பார்த்து, மாசக் கடைசிநாளில் சம்பளம் தரப்படாததால் ஏமாற்றம் அடைந்து தெரிந்தவர் ஒருவரிடமிருந்து எட்டனா கடன் வாங்கி வருகிறார். அந்தக் காசுக்கு வீட்டில் ஏகப்பட்ட செலவுகள் காத்திருக்கின்றன. இருப்பினும், அவருடைய நண்பன் ராகவன் வீடு தேடி வந்து அவரிடம் எட்டனா கடனாகக் கேட்டதும், என்றும் கேட்காத மனிதன் கேட்கிறானே என்று அந்தக் காசை நண்பனிடம் கொடுத்து விடுகிறார். நாம் இருப்பதைவைத்து ஒப்பேற்றலாம் என்று மனைவியிடம் சொல்கிறார் (மேல்பூச்சு)

புதுமைப்பித்தன் மனித நேய மாண்பைச் சுட்டுவதற்காக இந்தக் கதையை எழுதினார் என்பதைவிட, மத்தியதர வர்க்க மனிதர்கள் உள்ளுக்குள் எவ்வளவு சிரமப்பட்டாலும், வெளிப் பகட்டாகச் செயல் புரியவேண்டிய கட்டாயம் சில சமயங்களில் நேரிட்டுவிடுகிறது என்று காட்டவே இதை எழுதியிருக்க வேண்டும் என்றும் சொல்லலாம். மேல்பூச்சு என்ற கதைத் தலைப்பு இதைத்தான் உணர்த்துகிறது.

ஆனால், ‘சொன்ன சொல்’ கதையில் வருகிற சுப்பையாப் பிள்ளையின் செய்கை மனித குணத்தின் உன்னதத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.

உமையொருபாகன் பிள்ளை என்ற நண்பர் நடு இரவில் வந்து காலைப் பிடித்துப் புலம்பிக் கேட்டார் என்று சுப்பையாப்பிள்ளை தனது சொந்தப் பணம், கடன் வாங்கிய பணம், தன் நிலத்தை விற்று வந்த பணம் அனைத்தையும் சேர்த்து ஏழாயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்.

ஆனால் அந்த மனிதன் பண நெருக்கடி தாங்கமுடியாது. வைரத்தைப் பொடித்துத்தின்று இறந்து போனார். சுப்பையாப்பிள்ளை தன்னுடைய மீதிச் சொத்து முழுவதையும் விற்றுத் தனது கடன்காரர்களுக்குக் கொடுத்துவிடுகிறார். ‘வாக்குதான் சொத்து-பணவிஷயம்’ என்பது அவர் கருத்து. சொன்ன சொல்லை காப்பாற்றிய மகிழ்ச்சியோடு அவர், ஏழுமாதக் கர்ப்பணியான மனைவியை