பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

என்று கணக்கு எழுதி விட்டு, வழக்கம்போல் மனித யந்திரமாகி விடுகிறார்.

பழக்கத்துக்கு அடிமையாகிப்போனவன் அதிலிருந்து விடுபட முடியாது என்பதை அழுத்தமாகச் சித்திரிக்கிறது இந்தக் கதை. அது நற்பழக்கமாகவும் இருக்கலாம்; நற்பழக்கம் ஒரு பொன் விலங்கு ஆகிப் போகிறது; விலங்கு எதனால் செய்யப்பட்டிருந்தாலும், அடிமைத் தனத்துக்கு ஆளாக்கிவிடுகிற விலங்கு விலங்குதானே!

‘சுப்பையாப்பிள்ளையின் காதல்கள்’ வேறுவகை உணர்ச்சிகளை ரசமாகச் சொல்கிறது. வீரபாண்டியன்பட்டணத்து சுப்பையாப்பிள்ளை ஜீவனோபாயத்திற்காக சென்னைக்கு வந்து, எப்படி எப்படியோ வளர்ந்து, தாம்பரத்திலிருந்து பீச் ஸ்டேஷனுக்கு தினசரி பிரயாணம் செய்யும் யந்திரரீதியான வாழ்க்கையை மேற்கொண்டவர். அவருடைய ஒரு நாள் பயணத்தையும், அவரது மன ஓட்டங்களையும், இடைவழி ஸ்டேஷன் ஒன்றில் ஏறி, அவருக்கு எதிரே உள்ள ஸீட்டில் அமர்ந்து, ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறங்கி மறைந்த ஒரு யுவதி அவருள் ஏற்படுத்திய சலனங்களையும், அவர் மனம் பின்னிய கனவுகளையும் நயமாக வர்ணிக்கிறது இந்தக் கதை.

மத்தியதர வர்க்க மனிதர்களின் ஆசைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கை சோகங்களையும் துணுக்கமாக வர்ணிக்கிற புதுமைப்பித்தன் கதைகளில் ஒரு பொதுத்தன்மை பின்னிக் கிடக்கிறது. ‘செல்லம்மாள்’, ‘சுப்பையாப்பிள்ளையின் காதல்கள்’ போன்ற கதைகளில் இது நன்றாகப் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. இக்கதை மாந்தர்கள் திருநெல்வேலிக்கும் அப்பால் உள்ள ஊர்களிலிருந்து ஜீவனோபாயத்துக்காக சென்னை வந்து சேர்ந்தவர்கள். பாடுபட்டுப் பணம் சேர்த்துக் கொண்டு சொந்த ஊர்ப்பக்கம் போக வேண்டும் என்ற எண்ணம் வளர்ப்பவர்கள். கால ஒட்டத்தில் குடும்பச்சுமை பெருகப் பெருக, சொந்த ஊரின் பக்கம் ஒரு தடவைகூடப் போய்வர இயலாமல் போனவர்கள். பெண்களுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைக்க வேண்டும்; அதற்காக ஊருக்குப் போக வேண்டும் என்று எண்ணியும் பேசியும் திட்டமிட்டும், செயலில் நிறைவேற்ற முடியாமலே வாழ்க்கை பாரத்தினால் அழுத்தப் படுகிறவர்கள். கதை ஆசிரியரின் உள்ளத்தின் ஏக்கத்தைப் பெரும் அளவுக்குப் பிரதிபலிக்கிற பாத்திரங்கள் இவை என்று சொல்ல வேண்டும். அத்துடன், பட்டணம் சேர்ந்து பணம் பண்ணிவிடலாம் என்று ஆசைப்பட்டு,

வாழ்க்கையையே கடினமான சிலுவையாகச் சுமக்க நேரிட்டுவிடுகிற மத்தியதர வர்க்கக் குடும்பத்தினரின் நிலையை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் படப்பிடிப்புகளும்கூட கால காலமாக இன்றும்கூட நிலைமை அப்படித்தான் இருக்கிறது.