பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா, உள்ளத்தைத் தொடவில்லையானால்! நிற்கட்டும். உலகம் எது? என்றாள் அகலிகை.

வெளியே சென்றிருந்த கோதமனும் ராமனும் திரும்பிவிட்டார்கள். சீதை மட்டும் வெளியே வந்தாள். அகலிகை வரவில்லை.

‘ராமன் மனசைச் சுட்டது. காலில் படிந்த துளசி அவனைச் சுட்டது.’

இருவரும் போய்விட்டார்கள். கோதமன் உள்ளே நுழைந்தான். அவன் மனக்குகையில் மின்வெட்டும் யோசனைகள்.

‘அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம் மறக்கவேண்டிய இந்திர நாடகம் மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது.’

கோதமன் அவளைத் தழுவினான்.

கோதமன் உருவில் வந்த இந்திர வேடமாகப்பட்டது அவளுக்கு. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி:

கோதமன் கைக்குள் சிக்கிக்கிடந்தது ஒரு கற்சிலை.

அகலிகை மீண்டும் கல்லானாள்.

மனச்சுமை மடிந்தது.

கோதமன் கைலயங்கிரியை நாடிச் சென்றான், துறவியாக'

அகலிகையின் மன உளைச்சலையும், முடிவையும் அற்புதமாகச் சித்திரிக்கும் கலைப்படைப்பு சாப விமோசனம் தமிழில் படைக்கப் பட்டுள்ள சிறந்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று. பக்கத்துக்குப் பக்கம் புதுமைப்பித்தனின் எழுத்தாற்றல் வெகு நேர்த்தியாக ஒளிவீசுவதை ரசிகர்கள் உணரமுடியும். இடையிடையே வருகிற ஜனகன்-கோதமன் உரையாடலும், அகலிகை-கைகேயி பேச்சும் அரிய சிந்தனை வீச்சுக்களாக ஒளிர்கின்றன.

இதேபோன்று மற்றுமொரு உயரிய சிருஷ்டி, அன்று இரவில். பழைய புராணக் கதையின் புது மெருகுப் படைப்பு. இதிலும் புதுமைப் பித்தனின் படைப்புத்திறனும் எழுத்தாற்றலும் நன்கு பிரகாசிக்கின்றன.

சிவபக்தரான மாணிக்கவாசகர் வாழ்க்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிற நரியைப் பரியாக்கிய புராணக் கதையையும், சிவ பெருமான் திருவிளையாடல்களில் ஒன்றான 'பிட்டுக்கு மண்சுமந்த கதையையும் இணைத்து, அற்புதமான ஒரு சொல் ஒவியம் படைத்திருக்கிறார் புதுமைப்பித்தன்.