பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘நான்மாடக்கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை’ என்று தொடங்கி, சொக்கேசன், அரிமர்த்தன பாண்டியன், ‘உலகின் துயரத்தை வேதனையைச் சுமக்கிற வாதவூரர் (மாணிக்க வாசகர்) ஆகியோரின் நினைப்புகளையும், இறைவனின் திருவிளையாட்டையும் புதுமையான போக்கில் அவர் எழுதியிருக்கிறார். கருத்து நயமும், அதற்கேற்ற சொல்லாட்சி நிறைந்த நடையும் இக்கதைக்குத் தனித் தன்மை சேர்த்துள்ளன.

இதில் காணப்படுகிற நடையின் வேகம், ஆழம், அழகு ஆகிய வற்றைக் காட்ட ஒரு சிறு உதாரணம் குறிப்பிடலாம்

‘வாதவூரனாக ஈசன் வேதனை கொண்டான். அவன் மனம் என்ற சர்வ வியாபகமான காலம் கொல்லாத சர்வ மனம் நைந்தது, குமுறியது, கொப்பளித்தது, வாதவூரனாகக்கிடந்து வெம்பியது. குதிரை எனக் காட்டி ஏமாற்றி வந்துவிட்ட செயலுக்காக, தானும் அந்த மனிதனைப் போல சிட்சை பெற்றால்தான் ஆறும். வாதவூரன் தன் அருகில் வந்தால், அவன் அருகில் தான் இருக்க லாயக்கு என நினைத்தான்.

‘வேதனை சுமந்த கழுத்துடன் ஆலவாய்க் கர்ப்பக் கிருகத்திலிருந்து வெளிவந்தது ஒர் உருவம். ஈசன் வெளிவந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். எங்கே பார்த்தாலும் வெள்ளம். மதுரை மூதூரை ஊர் என்று அறியமுடியாதபடி ஆக்கிவிட்டது வெள்ளம், ஈசன் நடந்தான். ஈசன் சிரித்தான். ஈசன் வெள்ளத்தில் நீந்தி விளையாடி முக்குளித்துக் கும்மாளி போட்டுக் கொண்டிருந்தான்.

‘அசுரப் பசிபோலச் சுழித்தோடும்வெள்ளத்தில் மீன் போலப் புரண்டு, முழுகி முக்குளித்து விளையாடினான். வெள்ளத்தில் படம் விரித்துச் சீறிக் கொண்டு நீந்திச் செல்லும் நாகசர்ப்பம் மாதிரி எதிர்த்து நீந்துவான். ஆனந்த வெள்ளத்தில் மிதக்கும் யோகியைப் போலச் சுகாசனமிட்டு வெள்ளத்தின் போக்கில் மிதந்துவருவான். திரும்பவும் வாலடித்துத் திரும்பும் முதலையைப் போலக் கரைநோக்கி வருவான். பிறகு மீன்கொத்திப் புள் மாதிரி கைகளைத் தலைக்குமேல் வீசி கோபுரம் போலக் குவிய நீட்டிக் கொண்டு உயரப் பாய்ந்து தலைகுப்புற ஜலத்தைக் கிழித்துக் கொண்டு மறைந்துவிடுவான். ஜனங்கள் செத்தானோ என்று பயப்படும்போது மறுகரையில் தலை தெரியும். பிறகு சீறிவரும் பாம்பு மாதிரி நீந்தித் திரும்புவான்.

விளையாடி விட்டுத் திரும்பினான் ஈசன். அவனுக்காகத் காத்திருந்த அன்னை அங்கயற்கண்ணியின் ‘நெஞ்சு சுரந்தது. ஈசனின் வேதனை அவிந்தது.’ ஆனால், வாதவூரன் நிலை?