பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

புதுமைப்பித்தன் சுமார் நூறு கதைகள் எழுதியுள்ளதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் (1934ல்) அவர் எழுதிய கதைகளில் பல சாதாரணமானவை. ஆயினும், அவற்றிலும் சொல்லும் முறை, நடை, பார்வை முதலியவற்றில் அவருடைய தனித்தன்மை நன்கு வெளிப்பட்டிருப்பதை வாசகர்கள் எளிதில் உணரமுடியும்.

இவைபற்றிக் கூறும்போது, ‘என் கதைகளில் ஏற்றத்தாழ்வு உண்டு. அவற்றிற்குக் காரணம் வார்ப்புப் பிசகு அல்ல, கதை எழுதத் தூண்டிய மன அவசத்தின் உத்வேகத்தைப் பொறுத்தது கதையில் காணும் ஏற்றத் தாழ்வு’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்ந்து கொண்ட விஷயத்திற்கு ஏற்றபடி, கதையை எப்படிச் சொல்லவேண்டும் என்றும், தான் உணர்த்த விரும்புகிற உணர்வு அழுத்தத்தை படிக்கிறவர் மனசில் எவ்வாறு உண்டாக்குவது என்றும் நன்கு அறிந்து வைத்திருந்த சிறந்த சிறுகதை ஆசிரியர் புதுமைப்பித்தன். சிற்பியின் தரகம், பிரம்மராஷஸ், புதிய கூண்டு, ஒரு நாள் கழிந்தது, அகல்யை, அன்று இரவில், காஞ்சனை, செல்லம்மாள், சாப விமோசனம், மகாமசானம், கயிற்றரவு போன்ற-வெவ்வேறு விதமான விஷயங்களையும் வெவ்வேறு ரகமான உணர்வுகளையும் கொண்டுள்ள வெவ்வேறு விதமான-சிறுகதைகள் இதை நிரூபிக்கின்றன.

புதுமைப்பித்தன் கதைகள் பற்றி, சிறந்த சிறுகதைப் படைப்பாளியும் இலக்கிய விமர்சகருமான சி.சு. செல்லப்பா அறுதியிட்டுக் கூறுவது நினைவுகூரத்தக்கது. தமிழில் இலக்கிய விமர்சனம் என்ற, நூலில், ‘புதுமைப்பித்தன் கதைக் கரு’ எனும் கட்டுரையில் அவர் இவ்வாறு எழுதுகிறார்

இந்த அத்தனை கதைகளிலும் புதுமைப்பித்தனின் மனோதர்ம வீச்சு, ஒரு சிருஷ்டிகர்த்தா தான் உயிர் கொடுத்து சிருஷ்டிப்பதற்கு உபயோகிக்க முடிந்த தன் அனுபவ அம்சங்கள், எத்தனை சந்தர்ப்பங்களில் எத்தனை விதங்களில் படர்ந்து இருக்கின்றன என்பதைக் காணமுடிகிறது. கதையுலகத்தின் நியதி அது என்று அவர் பிரித்துக் கூறிய மாதிரி, வாழ்க்கையின் நியதியிலிருந்து எழுந்ததானாலும்கூட, வெறுமனே கண்ணால் பார்த்ததோடு நின்றுவிடாமல், கண் பார்த்து மூளைக்குள் செலுத்தி, தான் அறிந்து அதில் ஈடுபடும் முன்னரே கணிசமாக வேற்றுருவம் பெற்றுத் தனக்கென ஒரு கலாநியதியைப் பெற்றுவிட்ட அழகு அனுபவங்களாகும் அவர் கதைகள்.

புதுமைப்பித்தன் கதைக்காக எடுத்துக் கொண்ட விஷயத்திலும், உணர்வு அழுத்தத்தோடு அதைச் சொல்லும் முறையிலும் அக்கறை காட்டியதுபோல, கதை நிகழும் சூழலைப் படம் பிடித்துக்