பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எளிய நடையிலும் தனித் தன்மையோடு புதுமையாகவும் ரசமாகவும் பாத்திர அறிமுகம் செய்யும் திறமையையும் அவர் பல கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘வித்தல் ராவிற்கு மாறுவேடத்தில் அபார நம்பிக்கை அதிலும் தன்னுடைய திறமைக்கு எந்தத் தென்னிந்திய நாடக மேடை சார்லி சாப்ளினும் போட்டிபோட முடியாது என்பது இரண்டாவது நம்பிக்கை, சாதாரணமாக தாலுகா ஆபீஸ் குமாஸ்தா அல்லது எலிமெண்டரி பாடசாலை உபாத்தியாயர் மாதிரிதான் காட்சி அளிப்பார். சிற்சில முக்கிய சமயங்களில், மேல்நாட்டு உடைகளை அணிந்து ஒரு ஜாவா சுருட்டு சகிதமாகப் புறப்பட்டுவிட்டால், வெகுமதி வேண்டுமானலும் கொடுத்துவிடலாம். சிவபிரான் சிற்சில சமயங்களில் அர்த்தநாரீசுவரராகத் திகழ்வது உண்டு. கிப்ளிங் கவிதைக்கு விதிவிலக்காக, நமது வித்தல் ராவ், கீழ்மேல் நாடுகளின் நடையுடை இரண்டும் கலந்து பரிணமித்த ஒட்டுமாங்கனியாகத் தனித தமிழ் சிவத்தை முறியடிப்பதும் உண்டு’ (திருக்குறள் செய்த திருக்கூத்து). இது ஒரு உதாரணம்.

புதுமைப்பித்தன் கதைகளில் குழந்தைகள் அற்புதமான சிருஷ்டிகளாக உயிர்வாழ்கின்றன. இயல்பான குழந்தைத் தன்மையோடு, வேடிக்கையும் விளையாட்டுப் புத்தியுமாக, புத்தி சாதுரியம் மின் வெட்டும் பேச்சு சாமர்த்தியத்தோடு குழந்தைகளை எழுத்தில் உருவாக்கித் தனது கதைகளில் நட்மாடவிட்டிருக்கிறார் அவர்.

இவ்வாறு பல்வேறு அம்சங்களிலும் அவருடைய மேதைத் தன்மை பிரகாசிக்கும்படி புதுமைப்பித்தன் கதைகள் எழுதி, சிறு கதை இலக்கியத்தை வளம் செய்திருக்கிறார். இக்கலையில் அவர் எட்டியுள்ள சிகரங்களைத் தொட்டு பிடிக்கக்கூடிய எழுத்தாளர் வேறு எவரும் இல்லை என்றே சொல்லலாம். -

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் புதுமைப்பித்தன் பெரும் சிறப்புடன் விளங்குவதற்கு அவருடைய சாதனைகள் அடிகோலி உள்ளன.

சம்பிரதாயமான பாதையிலேயே சிறுகதை தளர்நடைபோட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், அவர் மற்றவர்கள் காண மறுத்த அல்லது பார்க்க விரும்பாத வாழ்க்கை யதார்த்தங்களைக் கண்டு, அவற்றை உள்ளது உள்ளபடி வலுவான நடையில் சித்திரித்துக் காட்டினார். கண்கள் இருப்பது எல்லாவற்றையும் பார்ப்பதற்குத்தான் என்ற இரும்புத் தத்துவம் நமக்குத் தேவை என்று குறிப்பிட்டுள்ள புதுமைப்பித்தன், எதை வேண்டுமானாலும் எழுத்தில் கொண்டு வரலாம்; ஆனால், எழுதுவதை அழகாக, நயமாக, உணர்ச்சித் துடிப்