பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உலக இலக்கியங்களில் ஆழ்ந்த தேர்ச்சி கொண்டிருந்த அவர் தமிழிலும் அவ் உத்திகளைக் கையாண்டு வெற்றி பெற்றார். தான் சொல்ல விரும்பியவற்றை அழுத்தமாகவும் புதுமையாகவும் சொல்வதற்காகத் தனக்கென ஒரு தனி நடையை அவர் வகுத்துக் கொண்டார். ஆங்கில வாக்கிய அமைப்புமுறைகளை-எழுதிச் செல்கிறபோதே நேரான வாக்கியத்தை உடைத்து, வேறு கருத்துக்களைக் கூற வகை செய்கிற ‘Parentetical claus:’ முறையை தாராளமாக உபயோகிப்பது: பின்னல்கள், சுற்றிவளைத்தல்கள் நிறைந்த ‘Complex sentences’ எழுதுவது போன்றவற்றை-எடுத்தாண்டு, பாராட்டப்படவேண்டிய புதுமைகளைச் செய்திருக்கிறார்.

ஆரம்பம், மத்திமம், முடிவு, சம்பவங்களின் அடுக்குகள், எதிர் பாராத திருப்பங்கள் என்றெல்லாம்கொண்டு கதை எழுதுகிற மரபு ரீதியான போக்கைத் தகர்த்துவிட்டு, மேல்நாட்டு இலக்கிய உத்திகளின் படி அவர் கதைகளை உருவாக்கிப் புதுவழி வகுத்தார். வட்டார வழக்குகளையும், மக்களின் பேச்சுமொழியையும் கதைகளில் தமிழில் முதன் முதலில் எடுத்தாண்டவர் புதுமைப்பித்தனேயாவார். பல விதமான சோதனைகளை அவர் வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டி கேலியும் கிண்டலும் கலந்த நகைச்சுவை நிறைந்த வேகமும் அழுத்தமும் படிந்த நடை அவருடைய தனிச் சிறப்பு. சொல் ஆளுமையும், சிந்தனை ஆழமும், நம்பிக்கை வறட்சியும் அவருடைய எழுத்தின் சிறப்பியல்புகளாக இலங்குகின்றன. சிறுகதையில் ஆழ்ந்த, கனமான சிந்தனை வெளிப்பாடுகளை புதுமைப்பித்தன் அளவுக்கு வேறு எவரும் செய்ததில்லை.

புதுமைப்பித்தன் கதைகள் பலவும் பின்வரும் பெயர்களில் தொகுப்புகளாகப் பிரசுரம் பெற்றிருக்கின்றன

புதுமைப்பித்தன் கதைகள் காஞ்சனை அன்று இரவு புதிய ஒளி சித்தி சிற்றன்னை உலக இலக்கியத்திலிருந்து நல்ல சிறுகதைகள் பலவற்றை புதுமைப் பித்தன் ஆங்கிலத்தின் வழியாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.