பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 வேறு சில சிறு சிறு கவிதைகளும் அவர் எழுதியுள்ளார்.

புதுமைப்பித்தன் ராஜமுக்தி சினிமாவுக்குக் கதை வசனம் எழுதுவதற்குப் புனா நகரம் சென்று, அங்கே காச நோயினால் மிகவும் கஷ்டப்பட்ட சமயத்திலும், அவருக்கே இயல்பான நகைச்சுவை, கேலி உணர்ச்சியோடு சிறு சிறு கவிதைகள் எழுதி வைத்தார்.

பழங்காலத்தில் மிகுந்த வறுமைநிலைப்பட்ட புலவர் ஒருவர் வேற்றுாரில்தான் படுகிற கஷ்டங்களை மனைவிக்கு உணர்த்த விரும்பியவராய், வானில் பறந்து சென்ற நாரையிடம் சேதி சொல்வது போல் ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாடல் தமிழில் பிரசித்தமான பழம் பாடல்களில் ஒன்று ஆகும்.

அதைப் பின்பற்றி புதுமைப்பித்தன், தனது உடல்நிலை குறித்து எழுதிவைத்த வரிகள் ரசிப்பதற்கு உரியனவாகும்

‘கையது கொண்டு மெய்யது பொத்தி
போர்வையுள் கிடக்கும் பெட்டிப் பாம்பென
சுருண்டு மடங்கி சொல்லுக்கு இருமுறை
லொக்கு லொக்கென இருமிக் கிடக்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே! ’