பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1. முன்னுரை


தமிழ்ச் சிறுகதை உலகில் தனிச் சிறப்புடன் உயர்ந்து நிற்பவர் புதுமைப்பித்தன்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தற்காலத் தமிழின் மறுமலர்ச்சிக்குக் கவிதைகள் மூலம் வளம் சேர்த்தார். அவருக்குப் பின்னர் உரைநடை வாயிலாக, முக்கியமாகச் சிறுகதைகள் மூலம், தமிழ் மொழிக்கு வளமும் வனப்பும் பெருமையும் சேர்த்தவர் புதுமைப்பித்தன் ஆவார். புதுமைப் பித்தன் சிறுகதை எழுதத் தொடங்கிய காலம், தமிழில் தற்காலப் பாங்கான சிறுகதை தலைதுாக்கி வளர ஆரம்பித்திருந்த காலம் ஆகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் தான் தமிழ்ச் சிறுகதை தற்காலப் பாங்கையும் இலக்கியத் தன்மையையும் அடையக்கூடிய பாதையில் அடி எடுத்து வைத்தது என்று சொல்ல வேண்டும்.

தீவிர தேசபக்தரும், சிறந்த இலக்கிய ரசிகரும், தமிழில் ரசனாபூர்வமான இலக்கிய விமர்சனங்கள் எழுதியவரும், படைப்பாளியுமான, வ.வே.சு. ஐயர் தான் தமிழ்ச் சிறுகதைக்கு தற்காலத் தன்மையும் இலக்கிய வடிவமும் தந்த முதல்வர் என்று கருதப்படுகிறது. அவர் எழுதிய மங்கையர்க்கரசியின் காதல், குளத்தங்கரை அரசமரம் போன்ற இலக்கியத்தரமான கதைகள் குறிப்பிடத் தகுந்த முன் உதாரணங்களாக விளங்கின.

அதே காலகட்டத்தில், தமிழின் முதல் மூன்று நாவலாசிரியர்களுள் ஒருவரான அ. மாதவய்யாவும் சமுதாயப் பார்வையும் சீர்திருத்தக் கருத்தும் கொண்ட சிறுகதைகள் எழுதினார்.

அவர்களுக்குப் பிறகு, 1930களில் தமிழ்ச் சிறுகதை வேகமும் வனப்பும் பெற்று வளரலாயிற்று. புதிய புதிய பத்திரிகைகள் அரசியல் பணி, சமூக சேவை, மொழிவளர்ச்சிக்கான தொண்டுகள் புரியும் நோக்கத்துடன் தோன்றிச் செயல்பட்டன.

வரலாற்று ரீதியில் அது ஒரு முக்கியமான காலகட்டம் ஆகும். நாட்டில் ஆட்சி புரிந்துவந்த அந்நியரிடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிய தேசீய இயக்கம், மகாத்மா காந்தியின் தலைமையில் செயல்புரியத் தொடங்கி மிகுந்த ஊக்கமும் உற்சாகமும்