பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

காட்டியது. அரசியல் விழிப்புடன், சமூக சீர்திருத்தவேகமும், மொழி மறுமலர்ச்சி உணர்வும் இந்தியா நெடுகிலும் ஏற்பட்டிருந்தன. இந்திய மொழிகள் அனைத்திலும் அந்தத் தாக்கம் நன்கு பிரதிபலித்தது. தமிழ் மொழியிலும் அதன் வேகம் புது மலர்ச்சிக்கு வகை செய்தது. பத்திரிகைகள் இவ்வகையில் ஊக்கமாகப் பணிபுரிந்தன.

இக்காலப் பகுதியில் பத்திரிகைகள் சிறுகதைகளை அதிகமாக வெளியிடுவதில் ஆர்வம் காட்டின. கதை எழுதுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாயிற்று. வாசகர்களின் தொகையும் பெருகத் தொடங்கியது.

வாசகர்களுக்கு இன்பம் அளிக்கும் விதத்தில், பொழுது போக்கிற்கு ஏற்ற, வாழ்க்கையின் ஆழமான பிரச்சினைகளைத் தொடாத மேலோட்டமான கதைகளை எழுதும் முயற்சியில் ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தார். அப்படி எழுதுகிறவர்களை ‘ஆனந்த விகடன்’ என்ற நகைச்சுவைப் பத்திரிகை மூலம் அவர் ஊக்குவித்து வந்தார்.

அந்த நோக்கிற்கும் போக்கிற்கும் மாறுபட்ட கருத்து கொண்ட எழுத்தாளர்கள் ‘சுதந்திரச் சங்கு’ ‘காந்தி’ போன்ற அரசியல்-சமூக நோக்குப் பத்திரிகைகளில் எழுதினார்கள்; பின்னர் 'மணிக்கொடி’ என்ற பத்திரிகையின் வாயிலாகத் தங்கள் படைப்பாற்றலை வெளிப் படுத்தினார்கள். ஒன்றரை வருட காலம் அரசியல், சமூகம், இலக்கியம் முதலிய துறைகளில் கவனம் செலுத்தி வந்த மணிக்கொடி தனிச் சிறுகதைப் பத்திரிகையாக மறுமலர்ச்சி பெற்றது. உலக இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் தேர்ச்சியும் பெற்றிருந்த திறமைசாலிகளான சில எழுத்தாளர்கள் தமிழ்ச் சிறுகதையிலும் சோதனைகளும் சாதனைகளும் செய்வதில் ஆர்வம் உடையவர்களாக இருந்தார்கள். உற்சாகமாகச் சிறுகதைகள் எழுதுவதில் ஈடுபட்டார்கள். நல்ல வெற்றியும் பெற்றார்கள். இக்குழுவில் முதன்மையானவர் புதுமைப்பித்தன்.

கதைக்கு எடுத்துக் கொண்ட விஷயங்களிலும், அவற்றை கதைகளாக எழுதும் வடிவத்திலும், சொல்லிச் செல்கிற எழுத்து நடையிலும் தனித் தன்மையான வேகத்தையும் ஒரு துணிச்சலையும் புதுமைப்பித்தன் காட்டினார். உலக இலக்கியத்தில் அவருக்கு இருந்த தேர்ச்சியைப் போலவே, பழந் தமிழ் இலக்கியத்திலும் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. இவ் அடிப்படையில் தமிழில் ஆழமும் கனமும் அழகும் கொண்ட புதிய படைப்புக்களை அவர் உருவாக்கினார். புதுமைப்பித்தன் சிறுகதை, குறுநாவல், இலக்கியக் கட்டுரைகள், விமர்சனம், ஒரங்க நாடகம், கவிதை என்று பல இலக்கிய