பக்கம்:புது டயரி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

புது டயரி


எண்ணினேன். ஒரு பங்களாவில் காவல் காத்து நின்ற தர்வானிடம் நண்பர்கள் ஹிந்தியில் பிர்லா மாளிகை எங்கிருக்கிறதென்று கேட்டார்கள். அவன் ஓரிடத்தை அடையாளம் சொன்னான். அதன்படி போய்ப் பார்த்தால் அது பிர்லா மாளிகை அல்ல; ஜின்னா இருந்த இல்லம், தர்வானிடம் எங்களுக்குக் கோபம் கோபமாக வந்தது. நாங்கள் கேட்டதொன்று, அவன் சொன்னது வேறொன்றாக இருந்ததனால் கோபம். திரும்பி வந்தோம், எங்களுக்குத் தவறான வழியைக் காட்டிய தர்வான் நின்ற பங்களா வழியாகவே மீண்டோம். அப்போது, “நான் ஒரு வேடிக்கை செய்கிறேன். நீங்கள் சிரிக்காமல் கவனியுங்கள்” என்று சொல்லிவிட்டு அந்தத் தர்வானைப் பார்த்துச் சிாித்தபடியே பேசத் தொடங்கினேன். “முட்டாள் பயலே நாங்கள் ஒன்று கேட்க ஒன்று சொன்னயே! மூடா” என்று சிரித்துக்கோண்டே சொன்னேன். நான் முகமலர்ச்சியோடு சிரித்தபடியே சொல்வதைக் கண்டு அவன் தன்னைப் பாராட்டுவதாக எண்ணிக் கொண்டான். “அச்சா! அச்சா” என்று புன்னகையுடன் தலையை ஆட்டினான். அந்த இடத்தை விட்டுப் போன பிறகு உடன் வந்த நண்பர்கள் அடக்கி வைத்திருந்த சிரிப்பைக் கொட்டினார்கள். நான் பேசுவது அந்தக் காவலனுக்குப் புரிந்திருந்தால் என்னைச் சும்மா விட்டிருப்பானா?

“தேசங்கள்தோறும் பாஷைகள் வேறு” என்று சொல்கிறார்கள். ஒரே மொழியைப் பேசுகிறவர்களிடையே கூடச் சில பகுதிகளில் இருப்பவர் பேசும் சில பேச்சுக்கள் மற்றப் பகுதியினருக்கு விளங்குவதில்லை. சென்னை ரிக்க்ஷாக்காரர், “கீது” என்றால் திருநெல்வேலிக்காரர், “இருக்கிறது” என்று புரிந்து கொள்ள முடிகிறதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/187&oldid=1153244" இலிருந்து மீள்விக்கப்பட்டது