பக்கம்:புது டயரி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

புது டயரி


வேலி என்னும் இடத்தில் உள்ள இராசேந்திர குருக்கள் என்பவர் வீட்டில் தங்கியிருந்தேன். அதன்பின் எப்போது யாழ்ப்பாணம் போனாலும் அவர் வீட்டிலேதான் தங்குவேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பராகி விட்டார்.

முதல் முதலில் அங்கே போயிருந்தபோது இராசேந்திர குருக்களிடம் அவருடைய குடும்பநலனைப் பற்றி விசாரித்தேன். அவர் தம் சகோதர சகோதரிகளைப் பற்றியும் தந்தையாரைப் பற்றியும் சொன்னார். பேச்சினிடையே, “ஒரு தங்கை மோசம் போய்விட்டாள்” என்றார். அதைக் கேட்டு எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவள் ஒழுக்கம் தவறி எங்கோ ஓடிவிட்டாள் என்றல்லவா தோன்றுகிறது? அதைப் போய் என்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று யோசித்தேன். அதற்கு மேல் அதைப்பற்றித் தூண்டித் துருவிக் கேட்கக் கூடாது என்று சும்மா இருந்துவிட்டேன்.

பிறகுதான் உண்மை தெரிய வந்தது. யாழ்ப்பாணத்துக்காரர் பேச்சு வழக்கைப் புரிந்துகொண்ட பிறகு, மோசம் போனாள் என்பது இறந்து போனாள் என்ற பொருளில் வருகிறது என்பது தெளிவாயிற்று. மோட்சம் போனாள் என்பதுதான் அப்படியாயிற்றுப் போலும்! நான் எண்ணியது என்ன? உண்மையான பொருள் என்ன? புரிந்து கொள்ளாத சங்கடத்தினால் நான் முதலில் எப்படியெல்லாம் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன்!

இலங்கைக்குக் கலைமகள் பத்திரிகை போகிறது. அங்கே ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். ஒருமுறை எங்கள் அலுவலக மானேஜர் ஏஜெண்டுகளுக்கு ஒரு சுற்றறிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/189&oldid=1153246" இலிருந்து மீள்விக்கப்பட்டது