பக்கம்:புது டயரி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூங்குகிற சுகம்

191

 தூக்கத்தில்தானே கழிந்துவிட்டது? பாவம் செய்வதற்குரிய சந்தர்ப்பம் அவனுக்குக் குறைவுதானே? உண்மையைச் சொல்லப் போனால், தூங்கும்போது திருடனானாலும் குழந்தையானாலும் சந்நியாசியானாலும் கொலைகாரனானாலும் எல்லோரும் ஒரே நிலையில், எந்தப் பாவமும் செய்யாமல் இருக்கிறார்கள். தூக்கத்துக்கு அத்தனை மகிமை!

தூக்கம் வராத சங்கடத்தைப் போலப் பெரிய துன்பம் வேறு இல்லை என்று சொன்னேன். அநுபவித்தவர்களுக்கு அந்த வேதனை நன்றாகப் புரியும். எல்லாரும் தூங்குகிறார்கள். நாம் மட்டும் விழித்துக்கொண்டிருக்கிறோம். கடிகாரத்தின் டக் டக் ஒலி தெளிவாகக் கேட்கிறது. எப்போதோ இடையில் சிறிது கண் அயர்கிறோம். மறுபடியும் விழிப்பு. இராத்திரிப்போது நீள்கிற மாதிரி தெரிகிறது. கடிகாரம் மணி அடிக்கிறது. ஒவ்வொன்றாக எண்ணுகிறோம். நான்கு மணி ஆகியிருக்கும் என்று எண்ணுகிறோம்.சீக்கிரம் விடிந்து விடும் என்ற நம்பிக்கை. மணி அடித்துக் கொண்டே இருக்கிறது. நான்கைத் தாண்டிவிட்டது. ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஒன்பது — இன்னும் முடியவில்லை. பத்து, பதினென்று, பன்னிரண்டு சே! இப்போது தான் பன்னிரண்டு ஆகிறது. இன்னும் விடிய ஐந்து மணி நேரம் இருக்கிறது. அதற்குள் சிறிது மயக்கம். மறுபடியும் மணி காதில் விழுகிறது. ஒரே மணி அடிக்கிறது. ‘ஒ! சற்றே உறங்கிவிட்டோம். நாலரை மணியாக இருக்கும்; அடுத்தது ஐந்து மணிதான்’ என்று எண்ணி ஆவலோடு விடியற்காலத்தை எதிர்பார்க்கிறோம். மறுபடியும் ஒரு மணி அடிக்கிறது. ‘ஒ முன்பு அடித்தது ஒரு மணி; இது ஒன்றரை மணி என்று நினைத்து வேதனை அடைகிறோம். அடுத்தது இரண்டு மணி அடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மறுபடியும் அந்தப் பாழும் ஒற்றை மணியே அடிக்கிறது. அப்போதுதான் உண்மை தெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/198&oldid=1153274" இலிருந்து மீள்விக்கப்பட்டது