பக்கம்:புது டயரி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையும் தவலையும்

197


முகரத்தைச் சரியாக உச்சரிப்பதாகவே அவர் பாவித்துக் கொள்வார். திருநெல்வேலி மாநிலத்தில் கிழவி கிளவியாகிறாள். சென்னையிலோ கெய்வியாகிறாள்; பழம் பயம் ஆகிறது. ழகரம் இவர்கள் வாயில் நுழையாது என்பதில்லை. வேண்டாத இடத்தில் அது வந்து நிற்கும். பைப் என்று தண்ணிர்க் குழாயைச் சொல்கிறோம். அதைச் சென்னையில் ‘பழுப்பு’ என்று பலர் சொல்கிறார்கள். குழாயைக் குயாய் என்று சொல்லும் அவர்கள் திருவாக்கில் வேண்டாத இடத்தில் ழகரம் வந்து தோன்றுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிலபேர் திருவாயில் ழகரம் ஷகரம் ஆகிவிடுகிறது. திருவிழாவைத் திருவிஷா என்கிறார்கள். உஷஸ் என்பதை உழையென்றும் கஷாயம் என்பதைக் கியாழம் என்றும் தமிழ்ப் புலவர்கள் ஆள்வதுண்டு. ஷகரத்துக்கு ழகரம் மாற்றாக வரும். அதற்குப் பழி வாங்குவதுபோல இவர்கள் ழகரத்துக்கு ஷகரத்தைக் கொண்டுவந்து, திருவிழாவைத் திருவிஷா ஆக்கிவிடுகிறார்கள்!

ணகரத்துக்கும் னகரத்துக்கும் வேறுபாடு தெரியாமல் சிலர் பேசுகிறார்கள். “செங்கோல் மண்ணன் ஆளும் மன்னில் குடிமக்கள் நன்றாக வாழ்வார்கள்” என்பதில் ணகரமும் னகரமும் தம்முள் பரிவர்த்தனை செய்துகொள்கின்றன!

இப்படி வந்த பிழைகளில் சில நாளடைவில் நிலையாக நின்றுவிடுகின்றன. இப்போதெல்லாம் நாம் உளுந்து என்றுதான் சொல்கிறோம். ஆனால் அதன் இயல்பான உருவம் ‘உழுந்து’ என்பதுதான். இப்போதோ ‘உழுந்து’ என்று சொன்னால் தவறுபோலத் தோன்றுகிறது; ‘அழுத்தந்திருத்தமாக உழுத்தம்பருப்பு என்றான்’ என்று பரிகாசம் செய்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/204&oldid=1153381" இலிருந்து மீள்விக்கப்பட்டது