பக்கம்:புது டயரி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசத் தெரியாதவர்களும் தெரிந்தவர்களும்

201

 மறு வாரம் வந்தார்கள். பேச்சுவாக்கில், “போன வாரம் வேறு வேலை இருந்ததோ?” என்று பெண்ணைப் பெற்ற தகப்பனாரைக் கேட்டார், பிள்ளையைப் பெற்றவர். அந்த மனிதர், “அந்த இழவை ஏன் கேட்கிறீர்கள்? என் பங்காளி ஒரு பிசாசு வந்து சேர்ந்தான். ஏதோ ஒரு கேஸ் சம்பந்தமாக இங்கே வந்து உட்கார்ந்துகொண்டு என் பிராணனையே வாங்கிவிட்டான். அவனை அனுப்புவதற்குள் என் தாலி அறுந்து போயிற்று” என்று ஆத்திரத்தோடு சொன்னார்.

பிள்ளை வீட்டுக்காரர்கள் இந்தப் பேச்சைக் கேட்ட பிற்பாடு அங்கே சம்பந்தம் செய்ய விரும்புவார்களா? மணம் பேச வந்தவர்களிடம் இழவு என்றும் தாலி அறுந்து போச்சு என்றும் பேசின பிறகு அங்கே அவர்கள் இருக்கத் தான் முடியுமா?

பாலக்காட்டுப் பக்கம் ஒரு பிராமணச் செல்வர் வைதிக சிரத்தை உடையவர். வேத அத்தியயனம் பண்ணாவிட்டாலும் வேத பாரங்கதராகிய ஒரு முதியவரிடம் உப நிஷத் முதலியவற்றைத் தெரிந்து கொண்டார். அந்தப் பெரியவரைத் தம்முடைய குருவாக மதித்து மரியாதை காட்டி வந்தார்.

அந்தச் செல்வர் ஒரு பெரிய வீடு கட்டினார். நிறைய மூங்கில்களைக் கொண்டு வீட்டை அமைத்தார். வீடு கட்டின பிறகு கிருகப்பிரவேசத்தன்று தம்முடைய குருவை வருவித்து உபசரித்தார். வீட்டின் பகுதிகளைக் காட்டினர். எங்கே பார்த்தாலும் மூங்கில் மயமாக இருந்தது. அந்தப் பெரியவர் சம்ஸ்கிருதம் கலந்தே பேசுகிறவர். மூங்கிலுக்கு வம்சம் என்று வடமொழியில் பெயர். அவர், “நிரம்ப வம்சக்ஷயம் ஆகியிருக்கும்போல் இருக்கிறதே” என்றார். “நிறைய மூங்கில்களை வெட்டிக் கொண்டு வந்திருப்பீர்கள்” என்ற அர்த்தத்தில் அப்படிப் பேசினார். ஆனால் அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/208&oldid=1153387" இலிருந்து மீள்விக்கப்பட்டது