பக்கம்:புது டயரி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசத் தெரியாதவர்களும் தெரிந்தவர்களும்

205


ஆதீன வித்துவானாக விளங்கினார். மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் மாணவராக அந்தக் கவிஞரிடம் படித்து வந்தார்.

சுப்பிரமணிய தேசிகர் எப்போதும் கற்றவர்கள் இடையில் இருந்து காலத்தைக் கழிப்பார். ஒரு நாள் வடமொழி தென்மொழிப் புலவர்கள் சூழ ஆதீனத் தலைவர் வீற்றிருந்தார். அவர் கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், பக்தி, கொடை யாவற்றிலும் சிறந்தவர். அவையில் இருந்தவர்கள் தத்தமக்குத் தோன்றியபடி அவரைப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அவருடைய தமிழ்ப் புலமையை ஒருவர் புகழ்ந்தார்; வடமொழி அறிவை மற்றொருவர் எடுத்துரைத்தார்; பூஜை செய்யும் சிறப்பை வேறொருவர் பாராட்டினார். இப்படி ஐந்தாறு பேர் சிறப்பித்துப் பேசினார்கள்.

அந்தக் கூட்டத்தில் அக்கினிலிங்க சாஸ்திரிகள் என்ற ஒருவர் இருந்தார். அவர் முதியவர். அவர் ஒன்றும் பேசவில்லை. அருகில் இருந்த ஒருவர், “நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?” என்று அவரைக் கேட்டார். “எல்லோரும் சொல்லட்டும்; பிறகு சொல்கிறேன்” என்றார். பலரும் பேசி முடித்த பிறகு அவர் பேசத் தொடங்கினார்.

“இதுவரைக்கும் எல்லாரும் நம் மகா சந்நிதானத்தின் பெருமைகளையே எடுத்துச் சொன்னார்கள். எல்லாம் சரிதான். ஆனால் இவர்களால் முடியாதது ஒன்று உண்டு. அந்த விஷயத்தில் இவர்களைவிட முன் இருந்த சந்நிதானம் கெட்டிக்காரர்” என்றார்.

அதைக் கேட்டு எல்லோரும், “என்ன இப்படிப் பேசுகிறார்?” என்று அவரையே உற்றுப் பார்த்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/212&oldid=1153444" இலிருந்து மீள்விக்கப்பட்டது