பக்கம்:புது டயரி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டிரிங் டிரிங்!

209


பட வேண்டிய வண்டியும் தாமதமாகப் புறப்படுமா? எத்தனை மணி கழித்துப் புறப்படும் ஒன்றும் தெரியவில்லை. யாரையாவது போய்க் கேட்டுவரச் சொல்லலாம் என்றால், எழும்பூர் ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்திலேயா இருக்கிறது? ஆறு மைல் போக வேண்டும். எழுதினதைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டேன். அங்கே போனால், இரண்டு மணி கழித்தே ரெயில் புறப்படும் என்று தெரிந்தது. பிளாட்பாரத்தையே என் அறையாக்கிக்கொண்டு எழுத உட்கார முடியுமா? இது வீட்டிலேயே தெரிந்திருந்தால் எழுதி முடித்துக்கொண்டு வந்திருக்கலாமே என்று தோன்றியது. வீட்டிலே தெரிந்திருந்தால்தானே?

‘டெலிபோன் இருந்தால் ரெயில் புறப்படும் நேரத்தைத் திட்டமாகத் தெரிந்து கொள்ளலாம்’ என்று ஒரு நினைவு வந்தது.

இப்படி எத்தனையோ சமயங்களில் டெலிபோன் இல்லாக் குறை பெருங்குறையென்று தோன்றலாயிற்று. டெலிபோன் இருந்தால் இருந்த இடத்திலிருந்தே நண்பர்களுடன் பேசலாம். அவசரமாக அச்சேறும் புத்தகத்தில் இன்ன பிழையைத் திருத்த வேண்டுமென்று போனிலே சொல்லலாம். மிகவும் அவசரமாக இருந்தால் வெளியூரில் உள்ள நண்பர்களுடன் டிரங்க் டெலிபோனில் பேசலாம். இப்படி நூற்றுக்கு மேற்பட்ட அநுகூலங்கள் டெலிபோனால் கிடைத்துவிடும் என்பதை எண்ணிப் பார்த்தேன். டெலிபோன் இல்லாமல் வாழ்நாளை விணாக்குவதாகவே பட்டது. அலைச்சல், பணச்செலவு, வீண் காலம் போக்குதல், நினைத்ததைச் செய்யமுடியாத சங்கடம் இத்தனை இடையூறுகளும் டெலிபோன் என்னும் ஒரே வரத்தால் போய்விடும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/216&oldid=1153454" இலிருந்து மீள்விக்கப்பட்டது