பக்கம்:புது டயரி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டிரிங் டிரிங்!

211


கேட்பேன். அவள் சிரித்துக் கொண்டே, “ஒன்றும் இல்லை” என்பாள்.

நான் இல்லாதபோது டெலிபோன் மணி அடித்தால் குழந்தைகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒடிப் போய் டெலிபோனை எடுப்பார்களாம். கடைசிப் பையன் எடுத்தால் பள்ளிக்கூடத்தில் ஒப்பிப்பது போல, “ஜே. முருகன்” என்று சொல்வான். இந்தத் தொந்தரவு தாங்காமல் என் மனைவி, “நீங்கள் போகும்போது உங்கள் அறையைப் பூட்டிக்கொண்டு போய்விடுங்கள். இந்தக் குரங்குகள் பண்ணுகிற குறும்புகள் என்னால் பொறுக்க முடியவில்லை. ஒரே ரகளையாக இருக்கிறது” என்றாள்.

ஒரு நாள் பூட்டிக்கொண்டு போனேன். வெளியிலிருந்து வந்தேனோ இல்லையோ, என் மனைவி சண்டையிடத் தொடங்கிவிட்டாள். “டெலிபோன் மணி லபோ லபோ என்று அடித்துக் கொண்டிருக்கிறது. யார் கூப்பிட்டார்களோ, தெரியவில்லை. நீங்கள் அறையைப் பூட்டிக் கொண்டு போய்விட்டீர்கள். டெலிபோன் இருந்து என்ன பிரயோசனம்?” என்று இரைந்தாள்.

“நீதானே, இந்த வால்கள் சும்மா இருப்பதில்லை, ஆகையால் பூட்டிக்கொண்டு போங்கள் என்று சொன்னாய்?” என்று கேட்டேன்.

“ஏதோ வார்த்தைக்குச் சொன்னால் நீங்கள் இப்படியா செய்வது? எதிர்வீட்டுப் பெண் யாருடனோ பேசவேண்டு மென்று படியேறி வந்தாள்; ஒரு நாளும் வராதவள் வந்த போது கதவு பூட்டியிருக்கிறது என்று சொல்லி அனுப்பி விட்டேன்; அப்போது எவ்வளவு அவமானமாக இருந்தது தெரியுமா?”

அப்போதுதான் அவள் கோபத்துக்குக் காரணத்தைத் தெரிந்துகொண்டேன். பூட்டுவதை விட்டுவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/218&oldid=1153461" இலிருந்து மீள்விக்கப்பட்டது