பக்கம்:புது டயரி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

புது டயரி


வீட்டு மங்கை டெலிபோனில் பேசவேண்டும்மே; அதற்காகத்தான். நான் எதையாவது ஆழ்ந்து படித்திக் கொண்டிருப்பேன்; அல்லது எழுதிக் கொண்டிருப்பேன். அப்போது இந்த இடையீடு. நாகரிக மங்கைக்கு உதவி செய்வது ஆண்மைக்கு அழகல்லவா? அதோடு என் வீட்டு ராணியின் பலத்தோடு புகும்போது நான் மறுக்க முடியுமா? பேசாமல் எழுந்து கூடத்துக்குச் செல்வேன். டெலிபோனை என் மேஜையின்மீது பொருத்தியது தவறோ என்று ஆராய்வேன். அந்தப் பெண்மணி ஒரு நிமிஷமும் பேசுவாள்; பத்து நிமிஷமும் பேசுவாள். அது யாருடன் பேசுகிறாளோ, அதைப் பொறுத்தது. பழைய கல்லூரித் தோழியாக இருந்து விட்டாலோ கேட்க வேண்டாம்; தமிழ் பாதி, இங்கிலீஷ் பாதி, சிரிப்புப் பாதி, கொஞ்சலான மிரட்டல் பாதி. இப்படியாக இருபது நிமிஷம் அந்த நிகழ்ச்சி நிகழும்.

எங்கள் பக்கத்து வீட்டில் என் நெருங்கிய நண்பர் இருக்கிறார், அவருக்குச் சென்னையில் உறவினர்கள் அதிகம். அவர்கள் அதிகமாக அங்கெல்லாம் போவதில்லை. அதற்கும் சேர்த்து அவருடைய தாயாரும் மனைவியும் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருவார்கள். அவர்களில் இரண்டு பேர் வீட்டில் டெலிபோன் இருந்தது. அந்த வீடுகளில் யாருக்காவது ஜலதோஷம் பிடித்தாலும் போதும்; என் டெலிபோனுக்குத் தலைவலி வந்து வடும்.

டிரிங், டிரிங்.. டக்... “யாரது?”

“கொஞ்சம் பக்கத்துவிட்டு அத்தையைக் கூப்பிடுகிறீர்களா?” என்று ஒரு பெண் குரல் கேட்கும். நான் ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டுக்காரரைக் கூப்பிட்டுச் செய்தி சொல்வேன். அந்த அத்தை வந்து பேசுவாள்; அவள் மருமகள் வந்து பேசுவாள். அரைமணி என் வேலை கெட்டு விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/221&oldid=1153471" இலிருந்து மீள்விக்கப்பட்டது