பக்கம்:புது வெளிச்சம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதற்காக?' என்றே தெரிந்துகொள்ளாது; பணம் தேடிக் கொண்டிருக்கும் இந்தச் சீரில்லா சீமான்களின் தயவுக்காக ஏங்கி இதமற்று வாழும் புலவர்கள், எழுத்தாளர்கள், சொற்பொழி வாளர்களின் சிந்தனைக்கு மட்டும்தான் என்று இந்த என் நூலில் சுட்டிக்காட்டிவிட விரும்புகிறேன்.

பெரிய படிப்புள்ள இவர்கள் கேட்கிறார்கள். உலகில் படித்தவர்களெல்லாம் ஞானிகளாகிவிட முடியுமா? என்று.

இது அவசியம் பதில்பெற வேண்டிய ஒரு கேள்விதான். 'முடியாது' என்பதுதான் இந்தக் கேள்விக்கு நான் அளிக்கும் பதிலும்! ஆனால், இம்மூன்று பிரிவினையும் பார்த்து நான் கேட்கும் கேள்வி இதுதான். உங்களில் ஒருவராவது ஒரு ஞானியாய் ஆக முடியாததேன்’ என்று.

எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் இந்த என் கேள்விக்கு இவர்களில் எவரொருவரும் பதில் கூறமாட்டார். இவர்கள் கற்ற கல்வியில் உள்ளதனைத்தும் சடப்பொருளைப் பற்றிய கல்வி. எதையறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ, அல்லது எல்லா நூல்களிலிருந்தும் எதுவொன்றே அறியத் தகுந்ததாகுமோ. அதுவே, 'ஒம்தத் சத்' இதை ஏன் இவர்கள் அறிந்துகொள்ளவில்லை?

'ஞானம்’ எனும் சொல்லுக்குப் பொருள், 'ஒம் தத் சத்' என்பதுதான். இதையறியக் கூடிய வாய்ப்பிருந்தும் இவர்கள் யாரும் அறிய முன்வரவில்லை. இதனை அறியாத வரையில் இவர்கள் அனைவரும் அஞ்ஞானிகள்தான். அஞ்ஞானிகள் வாழும் நாடு அமைதி காணாது என்று இனிக் கூற அவசியமில்லையல்லவா?

இருள் நீங்க விளக்கேற்றுவதுபோல், அஞ்ஞானம் நீங்க நாட்டில் ஞான ஒளி ஏற்றவேண்டும். 'அருள் செல்வம் செல்வத்துட் செல்வம்; பொருள் செல்வம் பூரியர் கண்ணுமுள' என்பது குறள். பொருள் செல்வத்தைக் காட்டிலும் அருள் செல்வம், செல்வத்துள் செல்வம் - சிறந்த செல்வம் என்கிறார், திருவள்ளுவர். இந்த அருள் செல்வத்தைப் புலவர்களாகிய எழுத்தாளர்கள் தேடிக் கொண்டுள்ளிர்களா?

புது வெளிச்சம்

ᗍ 3