பக்கம்:புது வெளிச்சம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செய்தபின் அருகிலுள்ளவர்களுக்கும் கேட்காத குரலில் மாணவனது காதின்மேல் குருவானவர் தம் வாய் வைத்துக் குசு, குசு வென்று மெல்லப் சொல்வது என்பது பொருள் மற்ற எவருக்கும் சொல்லக் கூடாது என்பது கட்டளை. ஆம் சாந்தோக்கியோபநிசத்து இரண்டாம் அத்தியாயம் 11.5/11.6ம் சூத்திரங்கள் கூறுவன இது. இந்தப் பிரம்ம ஞான வித்தையை தகப்பன் தன் முதல் பிள்ளைக்கு உபதேசிக்கலாம், அல்லது தகுதியுடைய மாணாக்கனுக்கு உபதேசிக்கலாம். மற்றபடி எவர்க்கும் உபதேசிக்கக் கூடாது. எல்லாச் செல்வத்துடனும் நிறைந்த இந்த நீர் சூழ்ந்த பூமியையே கொடுத்தபோதிலும், இது அதனினும் பெரிது இது அதனினும் பெரிது’ என்று. எனவே இந்தக் குருமார்களின் பாதபத்மங்களில் நாம் சிரம் வைத்து வணங்குவது தவிர இவர்களிடமிருந்து நமக்கு எந்த ஒரு நன்மையும் இதுகாறும் கிட்டவே இல்லை. பாவம் இவர்கள் ஒருவிதத்தில் கட்டுப்பட்டவர்கள், இருந்து விட்டுப் போகட்டும். இவர்களை நாம் நொந்துகொள்வதில் பயன் எதுவுமே இல்லை. அப்பாவிகள்தான் இவர்கள்!. தினத்தாள்கள், வார மாத இதழ்கள் இவர்களை உச்சிமீது துாக்கி வைத்துக்கொண்டு, ஆ.ஆ. ஓ.ஓ. என்று பாராட்டிய போதிலும், பாவனை பண்ணிய போதிலும் தாமறிந்ததை நம்மைப் போன்றவர்களுக்கு ஈந்து மனங்கொளக் கற்பிக்கவியலாத அசக்தர்கள் என்பதுடன் விட்டு, ரிதம் எனும் அந்த மகத்தான சொல்லுக்கு நாம் இனிப்பொருள் காணத் தொடங்கலாம்.

ரிதம் - விவகார உண்மை - உலகில் காணும் அழகும் ஒழுங்கும்! இயற்கை நியதியும் ஆம் எனப்படுகிறது. விவகாரம் எனும் சொல், வழக்கு எனும் பொருள் ஒன்றிற்கு மட்டும்தான் நாடு இன்று இட்டு வழங்குகிறது. நீதியதிபதித்வம் எனும் பொருளும் பண்டைநாளில் அது முதன்மையாகப் பெற்றிருந்தது. அறம் சட்டம் நெறிமுறை என்ற பொருளும் கூட ரிதம் தான். அழகுதான் ஒழுக்கம், ஒழுக்கமே பேரழகு. இயற்கையோடு அனைத்து உயிரினங்களும் இந்த நியதிக்கு உட்பட்டனவாகியே உள்ளன. நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வியழகே அழகு, என்றும் பண்டைக் காலத்திலேயே தமிழ் மக்களும் இதையறிந்தேற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இன்று நாம் உயிரோடு இருந்தும் அறியாதவர்களாய், அறிந்தும் அனுசரிக்காதவர்களாய் உள்ளோம்.

14 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்