பக்கம்:புது வெளிச்சம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுங்கும் அழகும். சத்தியம் பாரமார்த்திகம், அடிப்படையான உண்மை என இந்த உண்மையை எந்த மடாதிபதியும் எடுத்துக் கூறிவிளக்காதது தான் நமது தேசத்தின் எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணம் எடுத்துக் கூறி விளக்காதது மட்டுமல்ல; குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்தது என்பது போல உருவ வணக்கத்திற்கு முக்கியம் கொடுத்து இன்றும் நாட்டை நாசமாக்கிக் கொண்டுள்ளனர். வெறும் பெயர்ச் சொற்களுக்கு உருவம் உண்டாக்கிக் கோயிலில் வைத்துக் கும்பிடுவது ஆத்மீகம் என்று கூறுகின்றனர்.

'திரிபாதஸ்யாம் ருதம் திவி' - சத்து, சித்து, ஆனந்தம் என மூன்று பிரிவுகளாக உள்ளது. அந்தத் தெய்வம் என்கிறது. ஒரு உபநிசத்து. மற்றொரு உபநிசத்து, 'சத்தியம், ஞானம், ஆனந்தம், பிரம்மம்' என்று விளக்கித் தெளிவிக்கிறது. 'தேவாஸ்தம் பராதுர்யோஅன்யத்ராத்மனோ தேவான் வேத': தன்னுடைய ஆத்மாவுக்கு வேறாகத் தெய்வங்கள் உள்ளன என்று எவன் எண்ணுகிறானோ அவனை அந்தத் தெய்வமே தள்ளிவிடுகிறது என்கிறது இன்னொரு உபநிசத்து.

உபநிசத்துகள் மாத்திரம் அன்று: திருமந்திரமும் இப்படியே சொல்லித் தெரிவிக்கிறது. 'வானில் ஈசனைத் தேடும் மதியிலிகாள் தேனும் இனிமையும் சிவப்போ கருப்போ, - தேனும் இனிமையும் தேரவொன்றானதுபோல் சீவனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே', என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

விஞ்ஞானம் இரண்டு என்பர் அறிஞர். ஒன்று பொருளைப் பற்றிய விஞ்ஞானம் மற்றொன்று ஆன்மாவைப் பற்றிய விஞ்ஞானம். இன்று உலகம் முழுவதும் பயிலுகின்ற விஞ்ஞானம் பொருள் பற்றிய விஞ்ஞானம் மட்டும்தான். ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் திருமந்திரம், உபநிசத்துகள், திருக்குறள், புறநாநூறில் பல பாடல்களில் மட்டும் உண்டு. அவற்றில் உள்ளது உள்ளபடி விவரித்துக் கூறுவது உபநிசத்துகள். இந்த உபநிசத்துகளை மட்டும் தக்க ஆசிரியர்களைக் கொண்டு கல்லூரிகளில் ஒரு பாடமாகப் பயிற்று வித்தால் ஒரு சில ஆண்டுகளில் நமது தமிழகம் சுவர்க்கமாக மாறி விடும். மக்கள் தேவர்களாகிவிட முடியும் என்றும் நான் தெளிவாக அறிந்து இங்கு கூறுகிறேன்.



20 ᗛ

கவிஞர் வெள்ளியங்காட்டான்