பக்கம்:புது வெளிச்சம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பெண் வரதச்சனையின் காரணமாகத் தன்னைத் தான் மாய்த்துக் கொள்வதும் அந்தச் சுவர்க்கத்திலேயே நிச்சயிக்கப்பட்டு விட்டது என்று நாம் சொல்லித் தப்பித்துக் கொள்ளவும் கூடும், அவனன்றி அணுவும் அசையாது எல்லாம் அவன் செயல்தானே? நம்மேல் சுமத்தப்பட்டுள்ள மதபோதனையில், அந்த எல்லாம் வல்ல இறைவன் முழுப்பொறுப்பையும் தானே வைத்துக் கொண்டிருக் கிறான். ஆட்டுவித்தால் யாரொருவ ராடாதவரே என்னும் அருமை வாசகம் பொய்யாயிருக்க முடியுமா?

இங்கு விளக்கத்திற்கு ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் இம்மாதிரி எழுதுவது மட்டும் அந்த இறைவன் செயல் என்று எந்த ஒருவாயிலிருந்தும் ஒரே ஒருசொல் உதிராது. இவனொரு நாத்திகன் என்ற பட்டம் சூட்டவும், இறைவனடியார்கள் மறந்தும் தவிர்க்க மாட்டார்கள்.

'அகம் பிரம்மாஸ்மி'! என்று சொல்லவே இவர்கள் வாய் தயாராயில்லை தெய்வம் பாற்கடலில் ஆலிலைமேல், அல்லது ஆதிசேடன் மேல் பள்ளிகொண்டுள்ளார் என்று தான் அவர்கள் படிக்கப்பட்டுப் பழக்கப்பட்டுள்ளனர். பரலோகம், தேவலோகம், துறக்கம், வீடு என்பன போன்ற சொற்கள் அனைத்தும் இடப்பெயர்ச் சொற்கள்தான் என்பதில் எனக்கு முரண் இல்லை; ஆனால், 'நரகம் சுவர்க்கம்' எனும் சொற்கள் இடம் பெயர் குறித்து வழங்கி வந்தன எனில் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனெனில் சுவர்க்கம் எனும் இந்தச் சொல்லின் பிறப்பு அமைப்பில் இன்னும் வேறு சொற்களும் உள்ளன. மாதிரிக்கு ஒரு சில இங்கு எடுத்தெழுதுகிறேன்.

சு+வர்க்கம் = சுவர்க்கம் எனச் சேர்ந்து ஒலிப்பது போலவே, சு+மதி, க +தருமம், சு+கந்தம், சு+சீலம் சு+வர்ணம், சு+மங்கிலி, சு+தந்திரம், போன்ற சொற்களும் உள்ளன. 'சு' எனும் எழுத்து, மதி, தருமம், கந்தம் சீலம் போன்ற சொற்களை விசேடிக்க வந்தது. நல்ல எனும் பொருள் தருவது என்று எளிதில் விளங்குகிறதல்லவா? எனவே சு+ வர்க்கத்தின் கதையும் இதுவேதான். வருக்கம் எனும், இரண்டாமெழுத்தின் உயிர்கெட்டு ' வர்க்கம் ' என வழங்குகிறது. வர்க்கம் = கூட்டம், வகுப்பு என்றுதான் அது பொருள் தருகிறது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

புது வெளிச்சம்

33