பக்கம்:புது வெளிச்சம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இதே போல, 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றியான்' என்ற குறளும் இந்த ஆரியத் தெய்வங்களைப் பற்றி வள்ளுவப் பெருந்தகையின் உள்ளக்கருத்து வெளிப்படுவது காணலாம். வள்ளுவர் வகுத்து தந்த 'அறம், பொருள், இன்பம், வீடு' என்ற அமைப்பு எந்த ஒரு மதமும், ஏற்றுக்கொள்ளக் கூடிய வாழ்க்கையமைப்பென்பது' ஆரியத்துக்கும் ஏற்புடையதேயன்றோ? சரி, இது நிற்க.

புனர் செனனம் பற்றிக் கிருத்துவ தருமமும், இஸ்லாமிய தருமமும் சிரத்தையெடுத்துக் கொள்ளவில்லை. வாழப் பிறந்த மனிதன் சீவனுள்ளவரையும் இன்னின்னவாறு வாழ்ந்துவிட்டால் அதுவே போதும் என்ற அளவில் திருப்தியடைகின்றனர் அவர்கள்.

ஆனால், ஆரியரின் திருஞானசம்பந்தரால் கழுவிலேற்றப்பட்ட சமண மதமும், நாடு கடத்தப்பட்ட புத்த மதமும், ஆண்டவன் இல்லை என்ற நிலையிலும் இந்தப் புனர்செனனக்கொள்கையில் அதிகம் நம்பிக்கை வைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்து தருமத்தை மேற்கொண்டொழுகும் குடும்பங்களில் பிறந்து, நல்ல முறையில் கல்வி கற்ற சிந்தனையாளர்கள் பலரும் 'புனர் செனனம்' என்பது அறிவுக்குப் புறம்பானது என்று கூறும்போது தம் கூற்றுக்குப் பக்கபலமாக சமண பெளத்த தரும ஒப்புதல்களை இழுத்து நம்மேல் வீசி, அரைகுறைகளே இவற்றைப் பார்த்தாவது அறிந்து கொள்ளுங்கள் என்று கூறத் தவறுவதே இல்லை. இதில் என்ன நீதிநியதி உள்ளது? எப்படிச் சிந்தித்தாலும் அறிவுக்குப் புறம்பானது என்று நம் உள்ளம் உணரும் போது அவர்கள் நம்பினார்கள், நீங்களும் ஏன் நம்பக்கூடாது. என்று கேட்கிறார்கள். அவர்கள் இன்னும் என்னென்ன வெல்லாமோ நம்பினார்கள். அவற்றையெல்லாம் இவர்கள் ஏன் நம்பவில்லை?

இவர்கள் நமக்கு சொல்வது இதுதான். அதாவது தூக்கம், அதிலும் அயர்ந்தது தூக்கம் உடம்புக்கு ஆரோக்கியமானது. எனவே நீ தூங்கிக் கொண்டே இரு. நான் உன் தொடையில் கயிறு திரித்துக் கொள்ளுகிறேன்! .

இங்கு, பெட்ராண்டு ரசலின் ஒரு வாக்கியத்தைக் குறிப்பிட்டுவிட்டு மேலே இதைப்பற்றித் தொடர்கிறேன். என் அருமை நண்பனே கவனித்து படித்துத் தெரிந்து கொள்

.

புது வெளிச்சம்

57