பக்கம்:புது வெளிச்சம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



'அதையறிந்தவன் பாவச் செயலால் தொடப்படுவதில்லை. ஆகையால் அமைதியுடையவனாகவும், பொறுமையுடையவனாகவும், ஆத்ம நிஷ்டனாகவும் ஆகித் தன்னிடத்திலேயே அவன் தெய்வத்தைக் காண்கிறான். இவனைப் பாவம் தீண்டுவதில்லை அவனே எல்லாப் பாவங்களையும் தாண்டுகிறான். எனவே பாவமற்றவனாயும், அழுக்கற்றவனாயும், சந்தேகமற்றவனாயும், பிராமணனாயும் ஆகிறான்.

அருமை நண்பனே! சற்று சிந்தித்துப்பார்! மனிதனை பிராமணனாக்கும் தெய்வம் அவர்களுடையது. அந்த ஆற்றல் வாய்ந்த தெய்வத்தை அவர் நமக்குக் காட்டிக் கொடுக்காமல் வேறு தெய்வங்களை பலவீனமான தெய்வங்களையே நம் பங்குக்கு ஒதுக்கித் தந்துள்ளார். அவர் நமக்குக்கொடுத்த விஷ்ணு, சிவன், சூரியன், அம்பிகை, கணநாதன்களெல்லாம் நம்மை, பொங்கலிடு, பூசை செய், கும்பிடு போடு, கூடவே காணிக்கையும் போடு, மொட்டையடித்துக் கொண்டுசெல், அடுத்தவருடமும் வரத் தவறாதே என்று உத்தரவுகளை போட்டு மக்களைச் சாறாகப் பிழிந்து கொண்டு சக்கைகளாக்கி திருப்பி அனுப்பிவிடுகின்றன. என்னதான் செய்வது? மனம் சோர்ந்து நாம் இந்தத் தெய்வங்களைக் கைவிட்டாலும், இவைகள் நம்மை விடுமாறில்லை. அடிகளார்களும், ஆச்சாரிமார்களும், இடையன் பிரிந்து செல்லும் மாட்டை விரட்டி மந்தைக்குள் சேர்ப்பிப்பதுபோல் மிரட்டி ஒன்று கூட்டி விடுகிறார்கள். தலைவிதியே என்று நொந்துகொண்டு மதம் எனும் பட்டியில் நாம் அடைபட வேண்டியுள்ளது.

அந்தக் காலத்து கிராமந்துத் தெருக்கூத்தில் அல்லியரசி புலம்புகிறாள். அருச்சுனன் அல்லி தூங்கும்போது திருட்டுத்தாலி கட்டிவிட்டதை கண்டு, 'கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை; காரிகையே இது யார் சூதோ' என்று பாடிப் புலம்புவதுபோல் நம்மால் இந்த ஐந்து தெய்வங்களிடமிருந்து, என்ன செய்தும் கழற்றிக்கொள்ள முடியாத நிலையில் இன்னுமொருதளை நம் காலை இருக்கிக் கொண்டு விடுகிறது.

'குதிரை கீழே தள்ளியதுமன்றிக் குழியும் பறித்தது' என்கிற பழமொழி, அந்த சாணக்ய சந்ததிகளுடைய இந்தச் செயலுக்கு வெகு பொருத்தமானது என்று சொல்லலாம். அவர்கள் நமக்குக்-

66

கவிஞர் வெள்ளியங்காட்டான்