பக்கம்:புது வெளிச்சம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'அதிதி தேவோ பவ' என்ற சாரம் மிகுந்த அந்தபகுதியை வெட்டிய அளவில், மற்ற மாதா, பிதா குருவோடு நிறுத்திக் கொள்ளாமல் எதற்காகத் 'தெய்வம்' என்ற சொல்லை அங்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும்? இது உருவ வணக்கத்திற்கு உபயோகமாயிருக்கட்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

"தெய்வம் மனோமயமானது. உயிரும் உடலுமாக உள்ள மனித உருவமே தெய்வத்தின் உருவம், சத்தியமே அது சங்கல்பமாயுள்ளது. அதுவே ஆத்மா! அதுவே பிரம்மம். அது ஆகாசம் போன்றது - அதாவது ஒளிமயமானது என்று உபநிசத்துகளில் உள்ளதை ஏன் கல் உருவத்தில் இருப்பதாக மக்களுக்குக் காட்டி வஞ்சிக்க வேண்டும், ஏற்கனவே மக்களிடம் தொன்று தொட்டிருந்து வரும் வீரமும் விருந்தோம்பலும் ஏன் மறக்கடிக்க வேண்டும்? உபநிசத்தில் கோயில் கட்டிக் கும்பிடக் கூறும் தெய்வம் என ஒன்று உள்ளதா? அட பாவிகளே! இது உண்ணும் சோற்றில் நஞ்சுகலந்தது போன்ற செயல் தானே.

இன்று தமிழ்நாடு எந்த நிலையில் உள்ளது? தினத்தாள்களைப் பார்த்தால் நாடு நாடாக உள்ளதா? சாவுச் செய்திகள், சண்டைச் செய்திகள், மழை மாரியின்றி, ஆறு, குளம் அனைத்தும் வற்றி வறண்டு, எங்கு பார்த்தாலும் முட்செடிகளும், பார்த்தீனியச் செடிகளுமாய் மாறிவரும் பயங்கரமான இந்தக் காலகட்டத்திலாவது, “அகம்பிரம்மாஸ்மி', 'அயம் ஆத்மா பிரம்மம்', ‘தத்வமசி', பிரஜ் ஞானம் பிரம்மம்' என்பன போன்ற மகா வாக்கியங்களைத் தெரிய எடுத்துக்காட்டி மக்களுக்கு நன்மை செய்ய கூடாதா?

எதிர்காலம் அவர்களின் தவறுகளை மன்னிக்காது. தவறு செய்தவன் தண்டனைக்குரியவன். எனவே எந்த நீதியை அவர்கள் மக்களுக்கு வழங்கியுள்ளார்களோ அதே நீதியைத்தான் அவர்கள் பெற உரிமையுள்ளவர்கள் ஆகிறார்கள்.

காலம் கடந்து விடுமுன் உண்மையே தெய்வம், உருவங்களன்று என இப்போதே சொல்லிவிடுவார்களெனில் அப்போது, ஒருசமயம் மன்னிக்கவும் மக்களுக்குத் தோன்றலாம்.

79

கவிஞர் வெள்ளியங்காட்டான்