பக்கம்:புது வெளிச்சம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்லாத ஒரு சீவனைப் போல அளவற்ற இன்னலுக்கு உள்ளாகித் தீரும். ஒருநாட்டின் மேலாண்மைக்குச் சமத்துவம் உடல் போன்றும், சகோதரத்வம் உயிர் போன்றும் சுதந்திரம் உள்ளம் போன்றதும் என்பர் ஆராய்ச்சி வல்லுனர்கள்.

நாம் இவற்றைப் பற்றிச் சற்று உன்னிப்பார்த்தால் இம்மூன்றும் ஒன்றிய நிலையில் உள்ள முழு உண்மைதெற்றென விளங்கித் தீரும். ஆனால், நாம் எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணத்தை எப்போதோ இழந்துவிட்டிருக்கிறோம். கொஞ்சம் தோற்றப் பொலிவுள்ள மனிதன் சொல்வதை சிரசாக வகித்துச் செயல்படுவதே நமது நீண்டநாள் பழக்கமாக இருந்துள்ளது. சுயச்சிந்தனையை அறவே இழந்து விட்ட நாம் பிறர் எளிதாக ஏய்க்க இடம் கொடுப்பவர்களாகிவிடுகிறோம். இந்தத்துர்ப்பாக்கிய நிலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நம்மிடமிருக்கக் கண்ட வள்ளுவர் கழிவிரக்கம் கொண்டு இந்தக் குறையை தம் குறள்பாவில் எடுத்துக் கூறலானார் : எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. என்று

சமுதாயத்தின் தார்மிக நல்லுறவுக்குரிய அமைப்புச் சக்தி இதில்தான் உள்ளது. தம்மைப் பிரம்மாவின் சிரசில் உதித்தவர்களாக வெளியே தம்பட்டமடித்துக்கொண்டு சமுதாய இயக்குனர்களாக இன்றும் இருந்துகொண்டிருக்கும் சுயநலச் சூழ்ச்சிக்காரர்கள், இதை நன்கு அறிந்திருந்தும் கிணற்றில் கல்லைப் போட்டு விட்டு எதுவும் செய்யாததுபோல் பாவனை செய்துகொண்டு மெளனம் சாதிக்கிறார்கள் மற்றவர்கள், மிகப்பெரிய படிப்பினராயிருந்தும் இதையறிந்து கொள்ள இயலாதவர்கள் என்பதை நான் உணர்கிறேன்.

என்னைச் சதா சிந்திக்கச் செய்து கொண்டிருக்கும் சொற்கள் இம்மூன்று சொற்கள்தான். ஏனெனில், என்வாழ்வில் இவை எனக்கு முற்றிலும் அன்னியமானவைகளாகவே இருந்தன. ஆனால் மிக மிக அவசியமானவைகளாகவும் தோன்றின. வெயிலில் தகிக்கப்பட்டவன், நிழலும் நீரும் எதிர்பார்ப்பது போல், நோய்வாய்ப்பட்டவன், மருத்துவத்தை வேண்டியிருப்பதுபோல் எனக்குத் தேவையாயிருந்தவை இந்தச் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பவைதாம்.

72

கவிஞர் வெள்ளியங்காட்டான்